மதுரை: தமிழ் வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என்றும், தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மதுரை – திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தமிழ் வழியில் படித்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில் பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க இடஒதுக்கீட்டு சலுகை தந்தால் அதையும் தவறாக பயன்படுத்துகின்றனர். தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும். தமிழ் வழியில் பயில்வோருக்கு இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது” என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.