டில்லி,

காஷ்மீரில் கலவரக்காரர்கள் குழந்தைகளையும், சிறுவர்களையும் கேடயங்களாகப் பயன்படுத்துவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் தூண்டுதலால் இளைஞர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடிக்கிறது.

கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்மீது ராணுவத்தினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தினர்.

இதை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் பார்கவுன்சில் ஆப் அசோசியேஷன் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்நிலையில் நேற்று தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹெர் மற்றும் நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே கவுல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கலவரத்தில்  15 வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள் கலந்து கொண்டது ஏன்…என கேள்வி எழுப்பினர். இதேபோல் இளைஞர்களை கும்பலுக்கு முன்னே விட்டு ராணுவத்தினருடன் மோதவிடுவது ஏன் என்றும் நீதிபதிகள் வினா எழுப்பினர்.

மேலும் கலவரத்தில் 13 வயதிலிருந்து 24 வயதுவரை உள்ள இளம் மாணவர்கள்தான் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.