சென்னை:
ஆர்.எஸ்.பாரதி ஜாமினை ரத்து செய்ய காவல்துறையினர் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், நீதிபதிகள் நியமனம் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், வன்கொடுமை சட்டப்பிரிவில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு, அன்றே இடைக்கால ஜாமினில் விடுதலையானார்.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, ஆர்எஸ் பாரதிக்கு, கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாகவும், தொற்று நோய் பரவலை காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, மாநில அரசு கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் ? என நீதிபதி கேள்வி எழுப்பியவர், அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன்19 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.