தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிந்தது.

அதிமுக – பாஜக, திமுக – காங்கிரஸ், அமமுக – தேமுதிக, மநீம – சமக, ஆகியக் கட்சிகள் தங்கள் கூட்டணியுடனும் நாதக தனித்தும் இத்தேர்தலில் களம் காணுகின்றன. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 2,67,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்த நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை.

இது குறித்து இன்று காலை அவர் விளக்கமளித்துள்ளார்.

“வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த
சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும், இயலாமையும்.
இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துகொண்டேன். எனவே, தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்keனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…” என்று பதிவிட்டிருந்தார்.

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவு காரணமாகவே வாக்களிக்க வர இயலவில்லை எனப் பதிவிட்டுள்ள அவர் அதேவேளையில் பக்க விளைவுகள் தனிநபர் சார்ந்தது அதனால் யாரும் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.