புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எதற்காக ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்ற விளக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டுமென கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல்.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு கேட்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்திருந்ததற்கு பதிலடியாக பேசிய நிர்மலா சீதாராமன், “ராகுல் காந்தியின் இந்த வகைப்பட்ட பேச்சிற்கு கடந்த தேர்தலிலேயே மக்கள் சரியான பதிலடி கொடுத்தும், அவர் இன்னும் தனது பேசும் பாணியை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக கருத்துக் கூறியுள்ள கபில் சிபல், “நிதியமைச்சரின் பேச்சு முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. ரிசர்வ் வங்கியிடமிருக்கும் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு எதற்காக கேட்கிறது? இதுபோன்ற ஒரு நிலை இந்த நாட்டில் எப்போதுமே ஏற்பட்டதில்லை. எனவே, இப்போது அந்த நிலை எதனால் ஏற்பட்டது? என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியிடமிருந்து ஒரு கேள்வி வந்தால், அதற்கு சரியான மற்றும் விளக்கமான பதிலை அரசு அளிப்பதுதான் முறை. அதைவிடுத்து எதிர்க்கட்சித் தலைவரை பரிகாசம் செய்வது முறையல்ல” என்று கூறியுள்ளார் கபில் சிபல்.