இந்திய சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதும் தோற்றது; அவ்வளவுதான், பிட்ச் குறித்த விமர்சன கணைகளை தொடர்ந்து வீசி வருகின்றனர் பல இங்கிலாந்து கிரிக்கெட் பிரபலங்கள்.
ரசிகர்கள் திருடப்பட்டு விட்டார்கள், இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான பிட்சே கிடையாது, இந்திய கிரிக்கெட் நிர்வாகம், தங்களுக்கு சாதகமான வகையில் பிட்ச்சை தயார் செய்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழும்பி வருகின்றன.
இத்தகைய குற்றச்சாட்டுகள், அவர்களின் கிரிக்கெட் கலாச்சாரம் இன்னும் பண்படவில்லை என்பதையே காட்டுகிறது. சென்னை முதல் டெஸ்ட்டில், முதல் 2 நாட்கள் பிட்ச் செத்துக் கிடந்தது. இதனால், இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ஜாலம் காட்டினார்கள். இந்திய அணி பேட்டிங் செய்த 3வது நாளிலிருந்து பிட்ச் மாறத் தொடங்கியது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றதால், பிட்ச் குறித்து இங்கிலாந்து நாட்டவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.
ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு, பிட்ச்சின் தன்மை மாற்றப்பட்டது. இந்தியாவும் அதனால் பாதிக்கப்பட்டாலும், முதல் இன்னிங்ஸில் ரோகித் & ரஹானே மற்றும் பன்ட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் விராத் கோலி & அஸ்வினும் சிறப்பாக ஆடி, இந்திய அணியை மீட்டனர். ஆனால், இங்கிலாந்து தரப்பில் ஒரு பேட்ஸ்மேன் கூட சிறப்பாக செயல்படவில்லை. அப்போட்டியில், இங்கிலாந்து மோசமாக தோற்றவுடன் விமர்சனங்கள் எழுந்தன.
இதையெல்லாம்விட கவனிக்கத்தக்கது 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற அகமதாபாத் பிட்ச். இந்த பிட்ச் சுத்தமாக பேட்ஸ்மென்களுக்கு ஒத்துழைக்கவில்லை. இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்றால், இந்தியா 145 ரன்களுக்கு அவுட்டானது.
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 81 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா எளிதாக வென்றது.
இதன்பிறகுதான், பிட்ச் குறித்தே கதறுகிறார்கள் இங்கிலாந்து கிரிக்கெட் பிரபலங்கள். ஆனால், இந்தியாவுக்கு அதே நிலைதான் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். ஒருவேளை, கடைசி 2 போட்டிகளிலும் இங்கிலாந்தே வெற்றி பெற்றிருந்தால், இந்த விமர்சனமே எழுந்திருக்காது. இந்திய அணியை நன்றாக கிண்டலடித்திருப்பார்கள்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, அந்நாட்டில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரிலும், மறைமுக மனஅழுத்தத்தை இந்திய அணிக்கு அளித்தனர் ஆஸ்திரேலியர்கள். ஆனால், அதையெல்லாம் மீறித்தான், இரண்டாம்தர அணி என்று மதிப்பிடப்பட்ட ஒரு அணியை வைத்துக்கொண்டு, வெற்றிவாகை சூடியது இந்தியா!
எனவே, இங்கிலாந்து போன்ற நாடுகளில், வரும் காலங்களிலாவது நல்ல கிரிக்கெட் கலாச்சாரம் வளர வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.