ஜக்கி வாசுதேவின் மகளுக்கு திருமணமாகி இருக்கும் போது, ஏன் மற்ற பெண்களை சந்நியாசிகளாக இருக்க ஊக்குவிக்கிறார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முறையே 42 மற்றும் 39 வயதுடைய தனது நன்கு படித்த இரண்டு மகள்கள் ஈஷா யோகா மையத்தில் நிரந்தரமாக தங்குவதற்கு “மூளைச் சலவை” செய்யப்பட்டதாக மனுதாரர் கூறியிருந்தார்.
மனுதாரர் தனது வாக்குமூலத்தில், தனது மூத்த மகள் 2003 ஆம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றதாகவும், அதன்பிறகு இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார். 2004ம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர் அப்போது மாதத்திற்கு சுமார் ₹1 லட்சம் சம்பளம் பெற்றுவந்தார். 2007 இல் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவர்கள் 2008 இல் விவாகரத்து பெற்றனர்.
அப்போதிருந்து, அவர் ஈஷா அறக்கட்டளையில் யோகா வகுப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து, மனுதாரரின் இளைய மகள், மென்பொருள் பொறியாளர், யோகா மையத்தில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
“மூளைச் சலவை” செய்து ஈஷா யோகா மையத்திற்குள் நிரந்தரமாக அடைபட்டிருக்கும் தனது இரண்டு மகள்களை மீட்டுத் தரக்கோரி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் (69) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (எச்சிபி) எனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த மனுவில் மகள்கள் தங்களைக் “கைவிட்டதிலிருந்து” தனக்கும் தனது 63 வயதான மனைவிக்கும் வாழ்க்கை “நரகமாகிவிட்டது” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
யோகா மையத்தில் தனது மகள்களுக்கு சில வகையான உணவு மற்றும் மருந்து வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர் இது அவர்களின் அறிவாற்றலை மழுங்கடிக்கச் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஈஷா யோகா மையத்தில் அடைபட்டிருப்பதாகக் கூறப்படும் இரு பெண்களும் நீதிபதி முன் ஆஜரானார்கள். 42 மற்றும் 39 வயதுடைய சகோதரிகள் இருவரும் கோவை வெள்ளிகிரி மலையடிவாரத்தில் உள்ள யோகா மையத்தில் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.
தவிர, தங்களை யாரும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக காவலில் வைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினர்.
இருப்பினும், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய நீதிபதிகள், இந்த பிரச்சினையை மேலும் விரிவாக விசாரிக்க முடிவு செய்தனர்.
நீதிபதிகளின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ராஜேந்திர குமார், வழக்கின் எல்லையை நீதிமன்றத்தால் விரிவாக்க முடியாது என்றார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி சுப்பிரமணியம், அரசியலமைப்பின் 226 வது பிரிவின் கீழ் உள்ள ரிட் அதிகார வரம்பைப் பயன்படுத்தி நியாயம் வழங்க வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.
அது என்ன என்பது குறித்து அறிய வழக்கறிஞர் விரும்பினார்.
இதையடுத்து “தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் நல்லபடியாக வாழவைத்தவர், பிறருடைய மகள்களை மொட்டையடித்து துறவு வாழ்க்கையை வாழத் தூண்டுவது ஏன் என்பதை அறிய விரும்புகிறோம். அதுதான் சந்தேகம்” என்று நீதிபதி சிவஞானம் கூறினார்.
வயது வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த பாதையைத் தேர்வுசெய்ய சுதந்திரம் உள்ளது என்று வழக்கறிஞர் பதிலளித்தார்.
நீதிமன்றத்தின் சந்தேகத்தை வழக்கறிஞரால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிய நீதிபதி சுப்ரமணியம், “நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக ஆஜராவதால் உங்களுக்கு புரியாது. ஆனால் இந்த நீதிமன்றம் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இல்லை. வழக்காடுபவர்களுக்கு உரிய நீதியை வழங்கவே விரும்புகிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து மனுதாரரின் மகள்கள் விளக்கமளிக்க முற்பட்ட நிலையில், “நீங்கள் ஆன்மீகப் பாதையில் செல்வதாகக் கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோரைப் புறக்கணிப்பது பாவம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ‘அனைவரையும் நேசி, யாரையும் வெறுக்காதே’ என்பது பக்தியின் கொள்கை, ஆனால் உங்கள் பெற்றோரின் மீது உங்களுக்குள்ள வெறுப்பை எங்களால் பார்க்க முடிந்தது. நீங்கள் அவர்களை மரியாதையுடன் கூட பேசவில்லை” என்று நீதிபதி கூறினார்.
ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் எம். புருஷோத்தமன், சமீபத்தில் கூட அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்,
இதையடுத்து ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் பட்டியலிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் இ.ராஜ் திலக்கிடம் உத்தரவிட்டனர்.