திருவனந்தபுரம்:

டுவிட்டரில் கணக்கு இல்லாதது ஏன்? என்ற கேள்விக்கு ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

கேரளா மாநில அரசு சார்பில் கொச்சியில் ஒரு மாநாடு நடந்தது. இதில் ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ரகுராம் ராஜன் பதிலளித்தார். அதில் ஒருவர் தாங்கள் டுவிட்டரில் இல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘நான் சமூக வலை தளத்தில் இல்லை. எனக்கு அதற்கான நேரமில்லை. 20 முதல் 30 விநாடிகளில் 140 எழுத்துக்களை விரைந்து சிந்திக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. அதனால் தான் சமூக வலை தளத்தில் நான் இல்லை’’ என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

சிறந்த பொருளாதார நிபுணராக விளங்கும் ரகுராம் ராஜனின் இந்த பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது டுவிட்டரில் எழுத்துக்களின் அளவு 280 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.