புதுடெல்லி: பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, ராணுவத்தில் அதிகாரிகளுக்கும், ஜவான்களுக்கும் தனித்தனி உணவுகள் வழங்கப்படுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் முதன்முறையாக கலந்துகொண்ட ராகுல்காந்தி, இந்தக் கேள்வியை எழுப்பினார்.
மோடி அரசின் எல்லைப்புற மேலாண்மை கொள்கை, லடாக் பகுதியில் சீன ஆதிக்கத்தைக் கையாளுதல் ஆகியவை தொடர்பாக ராகுல் காந்தி முன்னர் எழுப்பிய கேள்விகளை விமர்சித்த பாரதீய ஜனதா, பாதுகாப்பு தொடர்பான ஒரு நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில்கூட ராகுல்காந்தி கலந்துகொண்டதில்லை என்று கூறியிருந்தது.
தற்போது அத்தகயை கூட்டத்தில் முதன்முறையாக கலந்துகொண்ட ராகுல்காந்தி, “பதவியின் அடிப்படையில் சம்பளத்தை வேண்டுமானால் நிர்ணயிக்கலாம். ஆனால், உணவையல்ல. தங்கள் பணியின்போது, மோசமான சூழல்களை நமது ஜவான்கள் சந்திக்கிறார்கள்” என்றார் ராகுல் காந்தி.
மேலும், குறிப்பாக எல்லைப்புற பகுதிகளில், பணியாற்றும் ராணுவத்தினரிடையே உணவு சமத்துவத்தைக் கொண்டுவரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் அக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார் ராகுல் காந்தி.
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ராணுவ தலைமைத் தளபதி, அது சம்பந்தப்பட்டவர்களின் உணவுப் பழக்கம் தொடர்பானது என்று விளக்கமளித்துள்ளார்.