சென்னை: தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், கறுப்பர் இனத்தை சேர்ந்தவரை மணம் முடித்தவருமான அமெரிக்க துணைஅதிபராக தேர்வாகி உள்ள கமலாஹாரிஸை கொண்டாடுபவர்கள், எனது மகள் திருமணத்தை எதிர்த்தது ஏன் என்று பிரபல கர்நாக இசைப்பாடகி சுதா ரகுநாதன் கொந்தளித்துள்ளார்.
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் மகள், மாளவிகா, ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற்றது. ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது வலதுசாரியினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பாரமபரியமான ஆச்சாரம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா வெளிநாட்டவரான அதுவும் வேறு மதத்தை சேர்ந்தவரான மர்ஃபியை திருமணம் செய்ததை, மதம், ஆச்சாரம், கலாச்சாரம் என்று கூறி சமூக வலைதளங்களில் கேவலமாக விமர்சிக்கப்பட்டது. இனிமேல் சபாவில் சுதா ரகுநாதனைப் பாட அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் நெட்டிசன்கள் குரல் கொடுத்தனர். ஆனால், அந்த திருமணத்தில், சுதா ரகுநாதன் வீட்டாருக்கோ அவரது மருமகன் மர்ஃபி வீட்டாருக்கும் பிரச்சனை இல்லை. இந்நிலையில்தான் வலதுசாரிகளும், நெட்டிசன்களும் கடுமையாக திட்டித்தீர்த்தனர்.
ஆனால், அதே நெட்டிசன்களும், வலதுசாரிகளும், தற்போது, கருப்பிணத்தவரை மணம் செய்த கமலா ஹாரிஸைப் பாராட்டுகிறார்கள். சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து மழை பொழிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுதா ரகுநாதன், எனது மகளின் திருமணத்தை எதிர்த்தவர்கள்தான், இன்று கமலாஹாரிஸ் கறுப்பின பெண் என்றும் கருப்பினத்தவரை மணம் முடித்தவர் என்று கூறி அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர். ஏன் இந்த பாரபட்சம், என்னை மட்டும் ஏன் எதிர்த்தார்கள் என்று சுதா ரகுநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தச் சமூகம் எவ்வளவு சமநிலையற்றதாக இருக்கிறது என்பதைத்தான் இதுபோன்ற செயல்கள் பிரதிபலிக்கிறது என்றவர், கமலா ஹாரிஸ் வெற்றியை இன்று எல்லோரும் பாராட்டும்போது எனக்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தவர், எனமு மகள் மாளவிகா விஷயத்திலும் நான் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேன் என்பது தற்போது ஊர்ஜிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் மேலும் வலிமையடைகிறோம் என்றவர், கர்னாடக இசைப் பாடகியாக இத்தனை நாள்களாக உச்சத்தில் இருக்காங்களே, அவங்களைக் கீழே இறக்குறதுக்கு இது ஒரு சான்ஸ்’ என என்மீது குரோதம் கொண்டவர்களே அதுபோன்ற விமர்சனங்களை முன்னெடுத்தனர் என்று குற்றம்சாட்டினார்.
உலகம் ஒரு மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ரொம்ப கன்சர்வேட்டிவ் என நான் நினைத்துக்கொண்டிருந்த குடும்பங்களிலெல்லாம்கூட பஞ்சாபி மருமகளும், பெங்காலி மருமகளும் வர ஆரம்பித்துவிட்டார்கள். உலகத்தில் இரண்டு இனம்தான். ஒன்று ஆண், இன்னொன்று பெண் அவ்வளவுதான். அந்த நோக்கத்தில்தான் இப்போது எல்லோரும் போய்க்கொண்டிருக்கின்றனர். `நெருப்பு என்று சொன்னால் சுட்டு விடாது’ ஆகையால் சொல்கிறேன். என் மகள் திருமண விவகாரத்தில் கருத்து சொன்னவர்கள் குடும்பங்களில் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் இதேபோல நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள். அவர்கள் குடும்பத்தில் நடக்கும்போது, `என் குழந்தை சந்தோஷமா இருக்கணும்’ என்றுதான் நினைக்கிறார்கள். அதுவே இன்னொருவர் வீட்டில் நடக்கும்போது குத்திக்காட்டி, குறை சொல்வதற்குத் தைரியம் வந்துவிடுகிறது.
இதுபோன்று விமர்சிப்பவர்களை நாம பொருட்படுத்தவே கூடாது. என் மகளுக்கு மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து வைத்தோம். இன்று என் மகள் அவள் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். மைக்கேல் என்னிடத்திலும் என் கணவரிடத்திலும் அம்மா-அப்பா என்று அன்போடு இருக்கிறார். என் மகள் பூஜை செய்கிறாளோ இல்லையோ அவர் பிள்ளையார் படத்தையும் லட்சுமி படத்தையும் வைத்து தினமும் பூஜை செய்கிறார். இது எனக்கு சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் தருகிறது…
இனிமேலாவது ஒருவரை விமர்சிக்கும்போது, இது நம் எல்லைக்கு உட்பட்டதா, நாம் விமர்சிக்கலாமா என்று உணர்ந்து விமர்சிக்க வேண்டும் என அறிவுரையும் நல்கினார்.