டெல்லி:

துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த விவகாரத்தில்  சபாநாயகர் காலதாமதம் செய்வது ஏன்? என கேள்வி விடுத்தது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட உச்சநீதி மன்றம் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு  ஒத்திவைத்தது.


ஜெ.மறைவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும், நம்பிக்கை வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது, எடப்பாடி அணிக்கு எதிராக தனி அணியாக செயல்பட்டு வந்த  தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இருந்தாலும் மெஜாரிட்டி காரணமாக, எடப்பாடி அரசு தப்பியது. இந்த நிலையில், அதிமுக கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியது. ஆனால், சபாநாயகர், அதை கண்டுகொள்ளாத நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும் சபாநாயகர் முடிவில் தலையிட மறுத்து விட்டது.

இதையடுத்து,  தி.மு.க. உச்சநீதி மன்றத்தில்மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

திமுக கொடுத்த மனு மீது சபாநாயகர் முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்?

தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா?

இந்த வழக்கில் 3 ஆண்டுகள் காலதாமதம் என்பது தேவையற்றது என கூறிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  தமிழக சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை    வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.