இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்ற மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா ரஜினியை சந்தித்து பேசினார்.
அசாதாரணமான அரசியல் சூழலில் நடந்த இந்த சந்திப்பு பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு ரஜினியை நக்மா அழைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார் நக்மா. அப்போது அவர், “ரஜினியும் நானும் நீண்ட கால நண்பர்கள். திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் நடந்த சாதாரண சந்திப்புதான் இது.
இதில் எந்தவித அரசியல் பேச்சும் இடம் பெற வில்லை” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் அறிவித்துள்ளது பெண்களை இழிவுபடுத்தும் செயல் இல்லையா என்று கேட்கபட்டதற்கு, “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்ற போதெல்லாம், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வளையல் அனுப்பப்புவோம் என்று ஸ்மிருதி இராணி தெரிவிப்பது வழக்கமாக இருந்தது.
தற்போதைய பிரதமர் மோடி தனக்கு 56 இன்ச் மார்பு உள்ளதாகச் சொல்லிக்கொள்கிறார். ஆனால், வீரர்களின் மரணம் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்? ஆகவேதான் தான் நாங்கள் வளையல் அனுப்பும் ப் போராட்டத்தை அறிவித்தோம்” என்று நக்மா தெரிவித்தார்.