புஷ்பா 2 படம் நாடு முழுவதும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மீது தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தீவிரமாக்கியுள்ள தெலுங்கானா அரசு அல்லு அர்ஜுனை கைது செய்த விவகாரம் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

தவிர, ஜாமீன் வழங்கப்பட்ட நிலையிலும் பல்வேறு நிர்வாக காரணங்களைக் காட்டி அல்லு அர்ஜுன் ஒரு இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் டோலிவுட் மட்டுமன்றி இந்திய திரை பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக களமிறங்கினர்.

இதையடுத்து சிறையில் இருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜுனை குடும்ப பிரச்சனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு சிரஞ்சீவி குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் சென்று சந்தித்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் சட்டசபையில் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனுக்கு கால், கண் அல்லது சிறுநீரக இழப்பு ஏற்பட்டதா ஏன் இவ்வளவு பேர் அவரைச் சந்தித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ரேவந்த் ரெட்டியின் இந்த கேள்வி திரையுலகினரையும் தாண்டி அரசியல் கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியான பாஜக பேசிவரும் நிலையில் ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சு சொந்த கட்சியினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தவிர, புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி வெளியான சந்தியா தியேட்டர் சம்பவத்தில் தொடர்புடைய முதல் 10 குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுன் மீது ரேவந்த் ரெட்டி தீவிரம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் பேசப்படும் அல்லு அர்ஜுனை கைது செய்வதன் மூலம் அகில இந்திய அளவில் பேசப்படும் அரசியல் தலைவராக ரேவந்த் ரெட்டி தன்னை முன்னிலைப் படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.