சென்னை: தேமுதிக தலைவர் பிரேமலதா இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விகளுக்கு பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த இரு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவுக்கு, அதிமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டபடி, அவரது தம்பி சுதீசுக்கு மாநிலங்களை உறுப்பினர் இடத்தை ஒதுக்க மறுத்து விட்டதால், அதிமுக மீது கடும் கோபத்தில் இருக்கும் பிரேமலதா,  சமீப நாட்களாக அதிமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய முதல்வர் ஸ்டாலினை, தேமுதிக தலைவர் பிரேமலதா தனது தம்பியுடன் சென்று சந்தித்து பேசினார்.  அப்போது முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,  100 சதவீதம் மரியாதை நிமித்தமாகவும், உடல்நிலை குறித்து விசாரிக்கவுமோ முதல்வரை சந்தித்தேன் என்று தெளிவுபடுத்தியவர்,   கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார். இரு குடும்பத்திற்கும் இடையே நட்பு  இருப்பதால், நட்பு ரீதியாக அவரின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தான் முதலமைச்சரை சந்தித்து உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தேன் என்றவர்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேப்டன் சார்பாகவும் தே.மு.தி.க. சார்பாகவும் சந்தித்து நலம் விசாரித்தேன் என்றார்.

தொடர்ந்து செய்தியளார்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  தே.மு.தி.க.வை பலப்படுத்தும் பணியில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம் என்றவர், 2026 ஜன.9-ல் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாடு மற்றும் கட்சியை வலுப்படுத்துவதே தற்போதைய நோக்கம் அதன் தொடர்ச்சியாக,  ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்கும் என்றார்.

2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு,  கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்றவர்,     யாருடன் யார் கூட்டணி என தற்போது கூற முடியாது. இன்னும் நேரம் உள்ளதால் சரியான நேரத்தில் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.