டில்லி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காங்.முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் ம்ன்மோகன் சிங் உள்பட ஏராளமானோர் வாழ்த்துதெரிவிதனர்.
ராகுலை வாழ்த்தி பேசிய சோனியாகாந்தி, அரசியலை விட்டு ஒதுங்க நினைத்த தான் அரசியலுக்கு வந்தது ஏன் என்று உருக்கமாக பேசினார்.
ராகுல் பதவியேற்பு விழாவையொட்டி காங்கிரஸ் அலுவலகம் உள்ள அக்பர் சாலை பகுதி முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. அங்கு பட்டாசுகள் வெடித்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் பதவி ஏற்றதை தொடர்ந்து,முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சிறப்புரை ஆற்றினார். அப்போது, “காங்கிரஸ் தலைவராக தான் பேசும் கடைசி பேச்சு இதுதான். ராகுல் காந்திக்கு என்னுடைய ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது அச்சத்தில் இருந்தேன். பதவியேற்றபோது எனது கைகள் நடுங்கியது ஞாபகம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதனை முறியடித்து இத்தனை ஆண்டு காலம் பயணித்துள்ளேன். இப்போது காங்கிரஸ் கட்சி புதிய திசையை நோக்கி பயணிக்கிறது.
பல்வேறு சவால்கள் நம் முன் காத்து கிடக்கிறது. சவால்களை ராகுல் காந்தி சாதனையாக்குவார் என நம்புகிறேன். நான் காங்கிரஸ் தலைவரானபோது காங்கிரஸ் 3 மாநிலங்களில்தான் ஆட்சியில் இருந்தது.
மத்தியில் ஆட்சியை பிடிக்க ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் மத்தியில் தொடர்ந்து 10 வருட காலம் ஆட்சியில் இருந்ததோடு, சுமார் இரு டஜன் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
தொடர்ந்து உருக்கமாக பேசிய அவர், என் மாமியார் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது என் தாய் கொலை செய்யப்பட்டதுபோல் உணர்ந்தேன். அவர் சுட்டுக்கொல்லப் பட்டதால்தான், எனது கணவர் ராஜீவ் காந்தியை அரசியலிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அப்போதைய சூழ்நிலை மற்றும் தனது பொறுப்பை உணர்ந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்றார்.
ஆனால், அவரும் பின்னர் அவரும் கொல்லப்பட்டார். எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டார்கள். அந்த இழப்பிலிருந்து நான் தேறிவர வெகு நாள்கள் ஆனது என்று உருக்கமாக பேசினார்.
மேலும், எனது கணவர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதால் எனக்கு அரசியல் வேண்டாம் என்றும், என் குழந்தை களுக்கும் அரசியல் தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் கட்சியை வழி நடத்த நாங்கள் தேவை என்பதை உணர்ந்தேன். அதைத்தொடர்ந்தே நானும் அரசியலுக்கு வந்தேன் என்றார்.
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து நாட்டின் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறோம். தேர்தலில் பல முறை தோற்றிருக்கிறோம். ஆனால், யாருக்கும் தலை வணங்கவில்லை.
இந்தியாவின் ஆன்மாவுக்காக எங்கள் போராட்டம் தொடரும். இந்தியாவின் அடிப்படை கொள்கைகள் தினமும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஒரு அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இதற்கான போராட்டங்களை எதிரொலிக்கும். எந்த வித தியாகத்திற்கும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
ராகுல் காந்தி எனது மகன். எனவே அவரை நானே புகழ்வது சரியாக இருக்காது.
ஆனால் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே தனது குடும்பத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை எதிர்கொண்டு தாங்கி வளர்ந்தவர்.
அரசியலுக்கு வந்த பிறகும், தனிப்பட்ட தாக்குதல்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். இதுபோன்ற நிகழ்வுகள், ராகுல் காந்தியை வலிமையான நபராக மாற்றியுள்ளது.
இன்று இந்த பொறுப்பிலிருந்து விலகும் நான், எனக்கு ஆதரவு அளித்த, என்னை நம்பிய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது ராகுல் தலைமை ஏற்றிருக்கிறார். நான் ராகுல் காந்தி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். ராகுல் காந்தி இந்த கட்சியை முழு மனதோடு முன்னேற்றுவார்.
அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய திசையில் பயணிக்கும் என்ற சோனியா, காங்கிரஸ் தொண்டர்கள் புதிய தலைமைமீது நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்றார்
சோனியாவின் இன்றைய பேச்சு மிகவும் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் வெளிப்பட்டது.