இந்திய ரயில்வே நாடு முழுவதும் 67,000 கி.மீ. தூரத்திற்கு 13,000க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களை இயக்குகிறது.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்வதோடு மட்டுமல்லாமல், கட்டணத்துடன் உணவு வகைளையும் வழங்குகிவருகிறது.

ஆனால், மகாராஷ்டிராவின் நான்டெட் மற்றும் பஞ்சாபின் அமிர்தசரஸ் இடையே இயங்கும் ‘சச்கண்ட் எக்ஸ்பிரஸ்’ (12715) ரயிலில் செல்லும் பயணிகளுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப்படுவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கு நான்டெட்டில் உள்ள சச்கண்ட் சாஹிப் குருத்வாரா-வின் பெயரிடப்பட்டுள்ளது.
தினமும் காலை 9:30க்கு நான்டெட்டில் துவங்கி மறுநாள் இரவு 9:45 மணிக்கு அமிர்தசரஸ் சென்றடைகிறது. மொத்தம் 33 மணி நேர பயணத்தில் 39 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இரண்டு குருத்வாராக்கள் இடையே ஓடும் இந்த ரயிலில் செல்லும் யாத்ரீகர்களுக்காக வழியில் உள்ள ஆறு முக்கிய ரயில் நிலையங்களில் இவர்களுக்காக காலை, மதியம், இரவு உணவு அந்தந்த ரயில் நிலைய பகுதியில் உள்ள குருத்வாராக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
புது டெல்லி, போபால், பர்பானி, ஜல்னா, ஔரங்காபாத் மற்றும் மராத்வாடா ஆகிய ஆறு முக்கிய ரயில்நிலையங்களில் இந்த ரயில் பயணிகளுக்காக வழங்கப்படும் உணவை அவரவர் தங்கள் சொந்த தட்டுகளை கொண்டு வந்து வாங்கிச் செல்கின்றனர்.

29 ஆண்டுகளாக 2,000 கி.மீ பயணம் முழுவதும் பயணிகளுக்கு இலவச உணவை வழங்கும் ஒரே ரயில் இதுவாகும், கொரோனா காலகட்டத்தில் கூட அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த இலவச உணவு வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.