தமிழக அரசியலில் ஒரு சீரிய, சிறந்த மற்றும் வித்தியாசமான ஆளுமை அறிஞர் அண்ணாதுரை. குட்டையான மற்றும் மிகச் சுமாரான தோற்றம் கொண்டிருந்த அண்ணாவின் திறமைகள் அளப்பரியன மற்றும் மாபெரும் ஆச்சர்யத்திற்குரியன!

கூட்டத்திற்காக செல்லும் ஊர்களில், கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்வார். சினிமாக் கொட்டகையின் பெஞ்சுகளில் படுத்துக்கொள்வார். முதல் நாள் கட்டிய அழுக்கு வேட்டியையே மறுநாளும் கட்டிக்கொள்வார்.

தன் குடும்பத்தை அரசியலில் எந்தவகையிலும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். தன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, தான் சார்ந்த சமூகத்திற்கும்கூட எந்தவித சிறப்பு நன்மையையும் செய்தவர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகாதவர்!

கட்சிக்குள் குழு அரசியலை வளர்க்காமல், உச்சபட்ச ஜனநாயகத்தைப் பேணியவர். தேர்தலில், மோசடி செய்து தன்னை தோற்கடித்தவர்களைக்கூட பெருந்தன்மையோடு அணுகியவர்! சர்வாதிகார மனோபாவம் இல்லாதவர்! நினைவில் வைத்து பழிவாங்கும் மனப்பான்மையைக் கொண்டிராதவர்!

அரசியலில் உச்சபட்ச எளிமையைக் கடைப்பிடித்தவர். தான் ஆட்சியிலிருந்த குறுகிய காலத்தில், பல சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்டவர். ஆனால், தமிழக அரசியல் குறித்த பொதுவெளியில், நேர்மை & எளிமை & கண்ணியம் & நிர்வாகத்திறன் போன்ற பல்வேறு அம்சங்களுக்கு மிகச்சிறந்த முதல்நிலை உதாரணமாக அறிஞர் அண்ணாதுரை முன்னிலைப்படுத்தப்படுவதில்லை!

இது இந்த சமூகத்தின் மோசமான அறியாமையைக் குறிப்பதேயன்றி, வேறில்லை!

 

– மதுரை மாயாண்டி