புதுடெல்லி: அரசியல் சாசனத்திற்கு விரோதமான தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த காரணம் என்ன என்று ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மற்றும் சந்திரசேகர ராவ் ஆகிய 3 முதல்வர்களையும் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யுலு.
பாரதீய ஜனதா அரசு கொண்டுவந்த இந்த திருத்த சட்டத்தை ராஜ்யசபாவில் ஆதரித்ததற்கான காரணத்தை விளக்கி அந்த மூன்று முதல்வர்களும் அறிக்கை வெளியிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “இந்த மோசமான அரசியல் சாசனத்திற்கு விரோதமான சட்டத்தை ஆதரிக்க 3 முதல்வர்களையும் நிர்ப்பந்தப்படுத்தியது எது? அவர்கள் மத்திய அரசின் மீதான பயத்தின் காரணமாக அதை செய்தார்களா?
தகவல் ஆணையரின் சுதந்திரத் தன்மையையும், மாநிலங்களின் உரிமைகளையும் காவு கேட்கும் இந்த சட்டத்தை ஆதரித்ததன் மூலமாக அவர்கள் தங்கள் மக்களுக்கு நன்மைகள் செய்ய முடியும் என்று நினைக்கிறார்களா? அந்த 3 முதல்வர்களும் தங்கள் மாநிலங்களுடைய இறையாண்மையை காவு கொடுத்துள்ளனர்.
மூன்று முதல்வர்களில் ஒருவர் மீது சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன என்பது புரிந்தாலும், மற்ற இருவர் எதற்காக அந்த மோசமான சட்டத்தை ஆதரிக்க வேண்டும்? எதற்காக டெல்லி சுல்தானியத்திடம் சரணடைய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.