தேசிய திரைப்பட விருது இந்திய அரசால் 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள நிலையில், சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் தட்டி சென்றார் .
இது குறித்து தேசிய விருது தேர்வுக் குழுவில் ஜூரியாக உள்ள கங்கை அமரன் பேசிய போது, ” தேசிய திரைப்பட விருதுகளுக்காக ஒரு நாளைக்கு 4 முதல் 5 படங்கள் என ஒரே மாதத்தில் 106 படங்கள் வரை பார்த்திருக்கிறோம். இதில் தேர்வு செய்வது ரொம்ப கடினமாக இருந்தது. ஏனென்றால், நிறைய புதிய படங்கள் வந்திருந்தது. இதில் தமிழுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று 7 விருதுகளுக்கு மேல் கிடைத்துள்ளது. புதியவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை விட்டுக் கொடுத்தோம்.
இந்த முறை எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. எதற்காகவும் ஜூரிகளிடம் சண்டை போடும் அவசியம் ஏற்படவில்லை. வெற்றிமாறனின் அசுரன் படத்தை சிறந்த படமாக ஒத்துக்கொள்வதிலும் தனுஷை சிறந்த நடிகராகவும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே ஒத்துக்கொண்டார்கள். தனுஷின் நடிப்பும், மனோஜ் பாஜ்பாயின் நடிப்பும் சரி சமமாக இருப்பது போல் உணர்ந்ததால் தான் இருவருக்கும் சிறந்த நடிகருக்கான விருது பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.”
மேலும், பார்த்திபனின் ஒத்த செருப்பு பத்துக்கு எந்த கேட்டகிரியில் விருது கொடுப்பது என்று தெரியவில்லை. ஏனென்றால், கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாப் பிரிவிலும் பார்த்திபன்தான் செய்திருந்தார். இறுதியாக எந்த பிரிவில் விருது என்று கேட்டபோது, எல்லா வகையிலும் சிறந்த படம் என்று கூறினார்கள். அதனால் தான் சிறப்பு ஜூரி விருது மற்றும் சிறந்த ஒளியமைப்பிற்கான விருது என இரண்டு விருதுகளுக்குஅதுவே, சந்தோஷமாக இருந்தது. ” என்றும் கூறினார்.
“பாலிவுட்டில் கதாநாயகிகளை மையப்படுத்தி சிறந்த படங்கள் வெளியாகியுள்ளது. கங்கனா ரணாவத் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததால் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை அதனால்தான் விருது கிடைப்பதில்லை” என தேர்வுக்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.