ஐதராபாத்:
கடந்த வாரம் ஐதராபாத் பெட்லபர்ஜில் உள்ள நவீன அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ஒரு இளம் கர்ப்பிணி வந்து சேர்ந்தார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் அந்த பெண் ஒரு குண்டை தூக்கி போட்டார். மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
குண்டூரை சேர்ந்த ஒரு தம்பதியருக்காக ரூ. 3 லட்சம் கட்டணத்தில் தான் வாடகை தாயாக செயல்பட்டதாகவும், பெண் குழந்தை பிறந்ததால் அந்த பெற்றோர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார்.
பெற்ற தாய், உயிர் கொடுத்த பெற்றோர் இருந்தும் அந்த குழந்தை தற்போது அனாதையாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கருத்தரிப்பு நடந்ததாக கூறப்படும் ஐதராபாத் எஸ்ஆர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டும் எவ்வித தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள 2 இடங்களில் நடந்த சோதனையில் சட்டவிரோதமாக அடைத்து வை க்கப்பட்டிருந்த 128 வாடகை தாய்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பிறந்த குழந்தைகளின் நிலை என்ன என்பது தற்போது வரை கேள்விகுறியாக உள்ளது. குறைந்தபட்சம் 8 குழந்தைகள் வரை பிறந்திருக்க கூடும்.
இது குறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை ஆணையர் கருணா கூறுகையில், ‘‘மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. ஆனால் இந்த குழ ந்தைகளில் நிலை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனாதை என்பதில் இருந்து சற்று விலகி இரு க்கிறார்கள். இது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.
இந்த குழந்தைகளுக்கு பொறுப்பெடுத்து வளர்க்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் ரமேஷ் ரெட்டி கூறுகையில், ‘‘ இந்த குழந்தை வாடகை குழந்தை. வாடகை தாய்க்கு பிறந்தது.
இதற்கு உயிர் கொடுத்த பெற்றோரும் உள்ளனர். அவர்கள் இந்த குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்றால் சட்ட சிக்கல்கள் அதிகம் உள்ளது. இது தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.
தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு பால் கொடுக்க அந்த பெண் சம்மதித்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்ப்டடுள்ளது. எனினும் அந்த பெண்ணும், அவரது கணவரும் விரும்பினால் அந்த குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவ துறையினர் தெரிவித்தனர்.