சென்னை: பசும்பொன் தேவர் திருமகனுக்கு பொருத்தப்பட்டும் தங்கக்கவசம் தங்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வங்கியிடம் முறையிட்டு வரும் நிலையில், தங்கக்கவசம் கட்சியினரிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தங்க கவசத்தைப் பெற எடப்பாடி தரப்பு புது முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தேசிய தலைவரான தேவர் திருமகனார் நினைவிடம், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ளது. தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள தேவர் சிலைக்கு தங்ககவசம் அணிவிக்கப்படுவது வழக்க்ம.
இந்த தங்கக்கவசமான, கடந்த 2014ஆம் ஆண்டில் ரூ.3.5 கோடி மதிப்பிலான 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அப்போதைய முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான இருந்த மறைந்த ஜெயலலிதா வழங்கியிருந்தார். இந்த தங்கக்கவசம் மதுரையில் உள்ள வங்கியின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், தேவர் குருபூஜையின் போது அதிமுக பொருளாளர் உள்பட நிர்வாகிகள் வங்கிக்குச் சென்று, தங்கக்கவசத்தை பெற்று, தேவர் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.
கடந்த 2015ம் ஆண்டு முதல், அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வங்கியில் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார். ஆனால், தற்போது, அதிமுக இரண்டாக பிரிந்து, தற்போதைய நிலையில் எடப்பாடியிடம், அதிகாரம் கிடைத்துள்ளதால், தேவர் தங்க கவச விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கக்கவசத்தை பெறுவது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் வங்கியில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும் கவசத்தை பெறுவதற்கு தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவின் ஒப்புதலும் அவசியம்.
இந்த நிலையில், தொடர்பாக நினைவிட அறங்காவலர் ஆதரவு கோர எடப்பாடி தரப்பினர் பசும்பொன் செல்கின்றனர். நினைவிட அறங்காவலர் காந்திமீனாவின் ஒப்புதலை பெற அவர்கள் ராமநாதபரம் செல்கின்றனர். இந்த குழுவில் தற்போதைய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் ராமநாதபிரம் சென்று காந்திமீனாவை சந்தித்து பேச உள்ளனர். காந்திமீனா சம்மதித்தால் தங்க கவசத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அளிக்க வங்கி நிர்வாகம் முன்வரலாம் என கூறப்படுகிறது.