கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து விக்ரம் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் அந்நியன்.
டைரக்டர் ஷங்கர் இயக்க, வசனத்தை பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதி இருந்தார் என்பதைவிட, துவம்சம் செய்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படத்தின் வசனங்கள் அப்போது பெரிய அளவில் ரசிகர்களால் பேசப்பட்டன.
அந்நியன் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக டைரக்டர் ஷங்கர் அறிவித்திருந்தார். இதுதான் இப்போது பயங்கரமாக பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கொதித்துப் போய் ஷங்கருக்கு கடிதம் எழுதினார்.
“அந்நியன் படக்கதை எழுத்தாளர் சுஜாதாவுடையது அவரிடமிருந்து நான் விலை கொடுத்து வாங்கி எனக்கு உரிமையாக்கிக் கொண்டேன். சுஜாதாவுக்கு பணம் கொடுத்தது உள்பட அத்தனை ஆவணங்களும் என்னிடம் உள்ளன.
அந்நியன் படத்தின் தயாரிப்பாளரான எனக்குத்தான் அந்தப் படம் தொடர்பான அத்தனை உரிமைகளும் உள்ளன. அப்படி இருக்க, நீங்கள் எப்படி என் அனுமதி இல்லாமல் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாம்?” என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கேட்டுள்ளார்.
இதற்கு டைரக்டர் ஷங்கர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா?
“அந்நியன் படத்தில் எழுத்தாளர் சுஜாதா வுடையது அதில் வரும் வசனங்கள் மட்டும் தான. படத்திற்கான திரைக்கதை முழுவதையும் அமைப்பது நான்தான் அதில் யாருடைய பங்களிப்பும் கிடையாது அது முழுக்க முழுக்க என் அறிவு சார்ந்தது.
இந்த விஷயம் அந்நியன் படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும்.
அவ்வளவு ஏன் படத்தின் டைட்டிலில் கதை திரைக்கதை இயக்கம் ஷங்கர் என்று போட்டதே நீங்கள்தானே?
அதனால் அந்நியன் படக்கதை உரிமையைப் பற்றி யாரிடமும் நான் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை” இப்படி காட்டமாக நிற்கிறது டைரக்டர் ஷங்கரின் பதில்.
எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகர்களோ சங்கரின் பதிலைக் கண்டு கோபத்தின் உச்சிக்குப் போய் இருக்கிறார்கள்.
“எழுத்தாளர் சுஜாதா இல்லாவிட்டால் சங்கரின் வெற்றிகரமான சினிமா பிழைப்பே நாசமாகப் போயிருக்கும். இதற்கு முக்கிய சாட்சி, சுஜாதா இறந்த பிறகு ஷங்கர் இயக்கி வெளிவந்த படங்களின் லட்சணங்கள். திரைக்கதை அமைப்புகள் வசனங்கள் போன்றவை சுஜாதா அளவுக்கு இல்லாமல் அளித்தனர் என்பது உலகுக்கே தெரியும்” என்று சாட்டையை சுழற்றுகின்றனர் சுஜாதாவின் ரசிகர்கள்.
இதற்கிடையே நாம் வாழ்வளித்த ஷங்கரே நமக்கு இப்படி துரோகம் செய்கிறாரே என்று நொந்து போன ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், தென்னிந்திய சினிமா வர்த்தக சபைக்கு இப்பிரச்சினையை தற்போது கொண்டு சென்றுள்ளார்.
அந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் ரவி கொட்டாரக்கரா. அவர் என்ன சொல்கிறார்?
“ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் முக்கிய அங்கத்தினர். அப்படிப்பட்ட நபரிடமிருந்து ஒரு புகார் வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் எங்களுக்கு உரிய விளக்கம் அளித்து தீரவேண்டும் என்று இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.”
நிலைமை இவ்வளவு அதகளமாக போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தால், டாப் ஹீரோ ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியன் படம் இந்தியில் வெளிவருமா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது
– வி.பி.லதா