ருமபுரி

மேகதாது அணை கட்டுமானத்துக்கு எதிராக மொத்த தமிழகமும் இணைந்து அறப்போர் நடத்த பாமக தலைவர் ஜி கே மணி அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றைக் கட்ட முயல்கிறது.   இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகம் இதை எதிர்த்து வருகிறது.  மத்திய அரசு இதுவரை கர்நாடக அரசை கண்டிக்கவில்லை.   அதே நேரத்தில் அணை கட்ட அனுமதியும் அளிக்கவில்லை.   இது தமிழக மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

இன்று தர்மபுரியில் பாமக மாநிலத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி கே மணி செய்தியாளர்களிடம், ”தமிழகம் தண்ணீருக்காக சுற்றியுள்ள இதர மாநிலங்களை நம்பியிருந்து கையேந்தும் வகையில் கடைமடை மாநிலமாக அமைந்து விட்டது.  எனவே தமிழகத்தைக் காக்கும் வகையில் பெருந்திட்டம் ஒன்றைச் செயல்படுத்த வேண்டும் என பாமக சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். நம் மாநிலத்தில் பெய்யும் ஒவ்வொரு துளி மழையும் நீரியல் வல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி நம் மண்ணை வளப்படுத்த உதவும் வகையில் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் உரிமை, காவிரியில் தமிழகத்துக்கான பங்கீட்டு நீர் உரிமை போன்ற உரிமைகளைக் காக்க அரசு உறுதியாக நிற்க வேண்டும். காவிரியில் தமிழகத்துக்கான பங்கீட்டு நீர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வழங்குவதிலேயே சிக்கல் நீடித்து வருகிறது. அப்படி இருக்க மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணைக் கட்டியே தீருவோம் எனக் கர்நாடக அரசு விதண்டாவாதம் செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பது ஆகும். தமிழக அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருமித்து நின்று மேகதாது அணைக்கு எதிரான நமது கருத்தைக் கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் விதமாக முழு அடைப்பு வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ அறப் போராட்டம் ஒன்றை விரைவில் நடத்த வேண்டும்.” எனக் கூறி உள்ளார்.