டெல்லி: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை உள்பட நாடு முழுவதும் உஷாராக இருக்க மத்தியஅரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் பிடிபட்ட 2 பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாதிகள் ஆளில்லா விமானம் மூலம், ஆபரேஷன் ஜிகாத் என்ற பெயரில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை செங்கோட்டையில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.