டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் மட்டும் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த தகுதி பெற்றிருந்தனர். 24.9 லட்சம் இளைஞர் சமுதாயத்தினர் முதன் முறையாக வாக்களிப்பதற்கு பதிவு செய்திருந்தனர் ஆனால், தேராராயமாக 60 சதவிகிதம் அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன. 5 மாநிலங்களிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியானது. இதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் உத்தரப்பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப்-பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், கோவா மற்றும் உத்தராகண்டில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி
403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி – 225 இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளது. சமாஜ்வாதி கூட்டணி – 148, காங்கிரஸ் – 6, பகுஜன் சமாஜ்வாதி – 24 மற்றவை – 0 என கூறியுள்ளது.
பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சி
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் குறித்து ஏபிபி கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கு ஆம்ஆத்மி 61 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், அகாளிதளம் 26 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் மற்றவை 5 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜக – 27 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. அத்துடன் காங்கிரஸ் கூட்டணி – 16 இடங்களையும், தே.ம.கட்சி – 14 இடங்களிலும், மற்றவை – 6 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
கோவாவில் தொங்கு சட்டமன்றம்
40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு உள்ளதாக தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும், ஆம்ஆத்மி 5 இடங்களிலும் மற்றவை 11 இடங்களையும் கைப்பற்றும் என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட்டில் தொங்கு சட்டமன்றம்
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக 37 இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களையும், ஆம்ஆத்மி ஒரு இடத்தையும், பிற கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றி உள்ளது.