மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆனபோதும் இதுவரை அம்மாநில முதல்வராக பதவியேற்க போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
இதை மேலும் தொடரும் விதமாக அம்மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து கருத்துக்கேட்க 2 மத்திய பார்வையாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது.
தேவேந்திர பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நாளை டிசம்பர் 3ம் தேதி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் பின் பாஜக சட்டமன்ற தலைவர் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவேந்திர பட்நாவிஸ் பெயரே தலைவர் பதவிக்கு முன்மொழியப்படும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் மஹாயுதி கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அடுத்தே அவர் முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
சிவசேனா (ஷிண்டே) மற்றும் அஜித் பவார் கட்சியினர் இடையே ஏற்கனவே அறிக்கை போர் துவங்கியுள்ளது தவிர துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவின் மகன் பதவி ஏற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதனை அவர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.