ஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் அளவிற்கு தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ராசெனேகா மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் அதிக அளவில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கானா மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் 1.2 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பு மருந்துகளை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காங்கோ, கம்போடியா, அங்கோலா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.