மரியா சின் அப்துல்லா, இந்தப்பெயர் தற்பொழுது மலேசிய ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகியிருக்கிறது. ஊழலுக்கு எதிராக பெர்ஸிஹ் 2.0 என்ற அமைப்பை தொடங்கி இவர் நடத்திய போராட்டங்களைக் கண்டு அதிர்ந்துபோய் தற்பொழுது இவரை சிறைவைத்திருக்கிறது அந்நாட்டு அரசு.

bersih_chin

“பெர்ஸிஹ்” என்றால் மலாய் மொழியில் சுத்தம் என்று அர்த்தமாம். இவரை விடுதலை செய்யும்படியும், பிரதமர் நஜீபை ராஜினாமா செய்யக் கோரியும் இவ்வமைப்பின் சீருடையான மஞ்சள் நிற டீஷர்ட்டை அணிந்து பெண்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அவரை விடுதலை செய்யும் வரை தினந்தோறும் மாலை நேரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1956 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த சீனரான சின் பின்னர் மலேசியாவில் வளர்ந்தார். அவர் சமூக ஆர்வலரான யூனுஸ் அலியை மணந்தபிறகு இஸ்லாமியராக மாறினார். 1987 ஆம் ஆண்டு ஒரு போராட்டத்தில் யூனுஸ் அலி கைது செய்யபப்ட்ட சம்பவம் சின்னையும் போராட்டக் களத்தில் இறக்கியது. யூனுஸ் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுநீரக கோளாறினால் காலமானார்.
2013-ஆம் ஆண்டுக்கு பிறகு பெர்சிஹ் 2.0 அமைப்பு ஊழலுக்கு எதிராக வெகு தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. மலேசியாவில் ஒரு பெண்மனி தலைமையேற்று நடத்துவது அரிதான விஷயம் ஆகும். சின்னுக்கு வலது கரம்போல வெகு காலமாக உறுதுணையாக இருப்பவர் அம்பிகா சீனிவாசன் என்ற தமிழ் வழக்கறிஞர் ஆவார்.
அதன்பிறகு சின்னுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன அதற்கெல்லாம் அசராமல் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இவரது மனவுறுதியைப் பார்த்து அவரைச் சந்திக்க விரும்பிய ஒபாமா அவரையும் அம்பிகாவையும் அழைத்து பேசி “இவர்கள் மிக தைரியமான பெண்கள்” என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது சிறையில் இருக்கும் சின்னுக்கு ஆதரவாக மலேசியாவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அவரது மூன்று மகன்களும் தனது தாயாரின் விடுதலை வேண்டி ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தொடர்ந்து உள்ளனர். தனது தாயார் மன உறுதி மிக்கவர் அரசின் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அவர் ஒருபோதும் அடிபணிய மாட்டார் என்று தெரிவித்தார்கள்.