சென்னை: அதிமுக எம்எல்எக்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமையகமான ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராவார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால், அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓபிஎஸ்-க்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது தொடர்பாக் நடந்த 7ம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. திமுக 66 தொகுதிகளில் வெல்ல எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று இபிஎஸ் தரப்பும், தென் மாவட்டங்களில் அதிமுக தோற்க வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய ஈபிஎஸ்தான் காரணம் என்று ஓபிஎஸ் தரப்பும் மாறிமாறி புகார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
அதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 10ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பொதுமுடக்கம் தொடங்கியுள்ளதால், கூட்டம் நடத்தி அதிமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு சென்னை மாநகர போலீஸ் அனுமதி கொடுத்துள்ளார். இதையடுத்து, இன்று மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவராகப் போவது யார் என்பது தெரிய வரும். அதற்கான வாய்ப்பு ஓபிஎஸ்க்கு கிடைக்கப்போகிறதா, இபிஎஸ்-க்கு கிடைக்கப் போகிறதா என்பது விரைவில் தெரிய வரும்.