கவுரி

பெங்களூரு: 

ர்நாடகா மாநிலம், பெங்களூருவில், பெண் பத்திரிக்கையாளர், கவுரி லங்கேஷ் (வயது 55)  மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ் ஆவார்.  இவர் பல்வேறு புகழ் பெற்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்ததார்.  கன்னட மொழியில் வெளியாகும், ‘லங்கேஷ் பத்திரிகே’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். கன்னட எழுத்தாளராகவும் விளங்கி வந்தார்.
பெங்களூருவில் உள்ள, ராஜ ராஜேஸ்வரி நகரில் இவரது வீடு இருக்கிறது.  வீட்டின் முன்,  நின்று கொண்டிருந்த கவுரியை அங்கு வந்த, மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.

கொலையாளி மிக அருகில் இருந்து 7 ரவுண்ட் சுட்டதில் 4 குண்டுகள் தவறியது. இரு குண்டுகள் கவுரியின்  மார்பிலும், ஒரு குண்டு அவரது நெற்றியிலும் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூன்று  தனிப்படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பிணமாக..

இடதுசாரி சிந்தனை  அதிகம் கொண்ட கவுரி, இந்துத்துவ அடிப்படைவாதத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார்.  வேறு பல கட்சிகளின் செயல்பாடுகளையும் விமர்சித்தவர் இவர்.

கவுரி லங்கேஷ் கடந்த 2008ம் ஆண்டில், பா.ஜ., எம்.பி., பிரகலாத் ஜோஷி குறித்து  பத்திரிகையில் எழுதினார். அக்கட்டுரை தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக லங்கேஷ் மீது ஜோஷி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 2016ம் தீர்ப்பு வழங்கப்பட்டு, கவுரி லஞ்கேஷ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதற்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்று, பின் ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார் கவுரி.

கவுரி, மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO) முதல் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தவர். அது தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டவர். அவர்மீது ஏராளமான அவதூறு வழக்குகளை இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்திருந்தன.

முன்னதாக, சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.