சென்னை:  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முற்பகல் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி ரூ.329 கோடியில் 29  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  முதல்வர்  யார் போலி விவசாயி? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இயக்கி தொடங்கி வைத்தார். அங்கு ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கட்டிடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), பள்ளி கல்வித்துறை, போலீஸ் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.22 கோடியே 37லட்சம் மதிப்பிலான 16முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பள்ளி கல்வித்துறை, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.328 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,

விவசாயத்தைப் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? எந்த தொழிலும் செய்யாமலேயே பிழைப்பு நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நூற்றுக்கு நூறு ஸ்டாலின் தான் காரணம். செய்வதை எல்லாம் அவர் செய்து விட்டு எங்கள் மீது பழி போடுவதா? என்றும் முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்டம் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வு நடத்தி அவர்களது குறைகளை முதலமைச்சர் கேட்டு வருகிறார்.

நேற்று வரை 26 மாவட்டங்களில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் இன்று 27வது மாவட்டமாக தூத்துக்குடியில் ஆய்வு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து உள்ளது என்று கூறிய முதலமைச்சர் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி புள்ளி விவரங்களுடன் எடுத்து கூறினார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

உங்களை ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சியினர் போலி விவசாயி என்று குறை சொல்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு முதலமைச்சர் காட்டமாக பதில் அளித்தார்.

போலி விவசாயி யார்? உண்மையான விவசாயி யார்? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? வேளாண்மையை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்துகிறார். தூத்துக்குடிக்கு வந்த அவர் பதநீர் குடித்திருக்கிறார். இனிப்பாக இருப்பதை பார்த்து இதில் சர்க்கரை கலந்து இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படிப்பட்டவர். அப்படித்தான் சொல்வார்.

தொழில் செய்யாமலேயே பிழைப்பு நடத்தும் ஸ்டாலின்

விவசாயம் என்றால் என்ன? எப்படி இருக்கும்? என்று என்னை கேட்டால் தெரியும். அவருக்கு என்ன தெரியும். என்ன தொழில் செய்கிறார் என்று அவருக்கே தெரியாது. எந்த தொழிலும் செய்யாமலேயே பிழைப்பு நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். எனக்கு விவசாயம் இருக்கிறது. அவருக்கு என்ன தொழில் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் உண்டு. அவருக்கு என்ன தொழில் என்று கேட்டால் அவர் என்ன சொல்வார்? என்னைப் பொறுத்தவரை நான் அரசியலில் இருந்தாலும் எனக்கு முதன்மையான தொழில் வேளாண் தொழில் தான். எங்கள் பகுதியில் போய் என்னைப் பற்றி கேட்டால் சிறுவயது முதலேயே நான் விவசாயம் செய்து வருகிறேன் என்று சொல்வார்கள். நான் கடுமையாக உழைத்தவன். எனவே உழைப்பு பற்றி அவர் சர்டிபிகேட் கொடுத்து பரிசோதனை செய்ய தேவையில்லை.

வேளாண் மக்களுக்கு செய்த உதவியால் தான் இன்று தமிழகத்திற்கு பல்வேறு தேசிய விருதுகள் கிடைத்து உள்ளன. நீர் மேலாண்மையில் தமிழகம் முதல் மாநிலமாக வந்து இன்று தேசிய விருதை பெற்று இருக்கிறோம். வேளாண் துறையை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரராக வந்ததால் தான் இது முடிந்தது.

குடிமராமத்து திட்டம் யார் கொண்டு வந்தது? இவர்களது ஆட்சியிலா கொண்டு வந்தார்கள்? தடுப்பணைகளை கட்டியது யார்? இவர்களது ஆட்சியிலா கட்டினார்கள்? இவர்கள் என்ன செய்தார்கள்? நீர் பற்றாக்குறையை சமாளிக்க காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம். கேரள முதலமைச்சருடன் பேசி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண இருக்கிறோம். சென்னை மாநகர குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம். சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வருவதற்காக ஆந்திர முதல்வருடன் நேரடியாக பேச்சு நடத்தி 10 டி.எம்.சி. தண்ணீரை வாங்கி இருக்கிறோம். இது வரலாற்று சாதனை.

இதுவரை 8 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்தது. ஆனால் இப்போது நாங்கள் 10 டி.எம்.சி. தண்ணீரை வாங்கி இருக்கிறோம். சென்னை மாநகரத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கி வருகிறோம். இதுபோன்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம். குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் கட்டியது, சாலை பணிகள், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்து இருக்கிறோம். எந்த மாநிலத்தில் இதை செய்திருக்கிறார்கள்? 11 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பணிகள் துவங்கி இருக்கிறது.

இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் 1650 எம்.பி.பி.எஸ். இடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை அல்லவா? நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பின் 6 சட்ட கல்லூரிகளை துவக்கி இருக்கிறேன். ஸ்டாலின் என்ன சாதனை படைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலை ஸ்டாலின் தான் காரணம்

இன்று கூட ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் குறித்து கூறியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நூற்றுக்கு நூறு ஸ்டாலின் தான் காரணம். அவர் தொழில் அமைச்சராக இருந்தார். அதனை மறந்து விட்டு பேசுகிறார். எடப்பாடிக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறார். ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் எல்லாம் சட்டசபை குறிப்புகளில் இருக்கிறது. இதனை பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் பார்க்கலாம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து அவரே கையெழுத்து போட்டிருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும். வாயை திறந்தால் பொய் சொல்கிறார். அது மட்டுமல்ல, இந்த ஆலைக்கு 1500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்ற செய்தியையும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறது. அவர் சொல்வது எல்லாம் பொய். செய்வதை எல்லாம் அவர் செய்து விட்டு எங்கள் மீது பழி போடுகிறார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நூற்றுக்கு நூறு ஸ்டாலின் தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி

அதையடுத்து செய்தியாளர்கள் முதல்வரிடம் பல்வேறு கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் புள்ளி விவரங்களுடன் பதிலளித்தார்.

கல்வித்துறைக்கு எவ்வளவோ நிதி ஒதுக்கி இருக்கிறோம். மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், காலணி, சைக்கிள், புத்தகப்பை, சீருடை உட்பட ஏராளமான பொருட்களை வழங்கி இருக்கிறோம். விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறோம். ஒரு மடிக்கணினியின் விலை ரூ.12 ஆயிரம். வல்லரசு நாடுகளில் கூட மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லை. ஆனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி வருகிறோம். இதுவரை 42 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி இருக்கிறோம். இது ஒரு சரித்திர சாதனை. கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம்.

அம்மா முதலமைச்சராக பொறுப்பேற்ற போது 2011–ம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதமாக இருந்தது. அதாவது நூற்றுக்கு 34 பேர். ஆனால் இன்று அம்மாவின் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இன்று நூற்றுக்கு 50 பேர் உயர்கல்வி படிக்கும் நிலை உருவாகி உள்ளது. சட்டக்கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், கலை கல்லூரிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் என ஏராளமாக கொண்டு வந்துள்ளோம்.

இந்த மாவட்டத்திலேயே 3 உயர்நிலை பள்ளிகள், 3 மேல்நிலை பள்ளிகளை கொண்டு வந்திருக்கிறோம். கல்வியின் தரத்தை உயர்த்தி இருக்கிறோம். சாதாரண ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களும் உயர்கல்வி பெறுவதற்கும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கும் அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஏழை எளிய மாணவர்கள், திறமையான மாணவர்கள் உயர்கல்வி படிக்க வசதியாக அதிக கலை கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறோம் என்று என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கொரோனா குறைந்தது

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக இன்று கொரோனா பெருமளவு குறைந்துள்ளது. தேவையான மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகள் இருப்பில் உள்ளது. காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11,343 காய்ச்சல் முகாம்களை நடத்தி இருக்கிறோம். இதன் மூலம் 6 லட்சத்து 10 ஆயிரத்து 292 பேர் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சல் முகாம் நடத்தும் போது யாருக்கேனும் நோயின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுத்ததன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேயொரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உள்ளது. வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து காய்ச்சல், இருமல் இருக்கிறதா என்று கேட்டு வருகிறோம். ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடமாடும் மருத்துவ குழுவும் உள்ளது. ஏதேனும் தகவல் வந்தால் உடனே மருத்துவ குழு அங்கு சென்று அனைத்து சோதனைகளையும் நடத்துகிறார்கள். அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நோய் குறைந்து வருகிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இன்று காலையில் கூட தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.16 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சைக்காக நவீன கருவிகளை இயக்கி வைத்தேன்.

விமான நிலைய விரிவாக்கம்

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 106 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதனையும் எடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.29 கோடியே 50 லட்சம் செலவில் யாத்தீரிகள் நிவாஸ் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

ஏராளமான குடிநீர் திட்டங்கள் இந்த மாவட்டத்திற்கு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஏராளமான தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

2 ஆயிரம் மினி கிளினிக்

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக் துவங்க இருக்கிறோம். ஒரு மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இருப்பார்கள். ஒரு மாதத்தில் இந்த கிளினிக் ஆரம்பிக்கப்படும். ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற இது வசதியாக இருக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.