சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய,  யார் அந்த சூப்பர் முதல்வர்?  என கேள்வி எழுப்பிய நிலையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ’எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை 3 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தேசிய கல்விக்கொள்கை மற்றும் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுப்பு தொடர்பான திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட நிலையில், அதற்கு  பதில் அளித்து மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் , புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ஹிமாச்சல் ஆகிய மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்கின்றன.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு தவறாக வழி நடத்துகிறது. மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. மாணவர்களை தமிழக அரசு வஞ்சிக்கிறது. தவறான தகவல்களை தெரிவிப்பதோடு மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைக்கின்றது. மாணவர்களின் எதிர்காலத்தோடு தமிழக அரசு விளையாடுகிறது.

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பது தொடர்பாக எம்.பி.,க்கள், தமிழக கல்வி அமைச்சருடன் என்னை நேரில் சந்தித்தனர். கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 15ல் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட தமிழக அரசு தற்போது யூ-டர்ன் அடிக்கிறது. (தமிழக எம்.பி.,க்களை நாகரீகமற்றவர்கள் என விமசர்னம் செய்தார்.)

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் சேர தமிழக முதல்வர் சம்மதித்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்; யார் அந்த சூப்பர் முதல்வர் என்று எம்.பி., கனிமொழி கூற வேண்டும் என  பேசினார்.

 இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், , ’எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

”பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?

மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, முதல்வரே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.