சென்னை: தமிழ்நாட்டில் யார் யாருக்கெலாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும், அதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து தமிழகஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று பட்டினம்பாக்கத்தில் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, இன்றுமுதல் நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் எத்தனை பேர் பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்கள், அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் 20.3 லட்சம் பேர் உள்ளனர். சுகாதார பணியாளர்கள் 5.65 லட்சமும், முன்களப் பணியாளர்கள் 9.78 லட்சம் பேரும் இருக்கின்றனர். மொத்தமாக தமிழகத்தைப் பொறுத்தவரை 35 லட்சத்து 46 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்கள்,
60 வயதுக்கு மேற்பட்ட கொமொர்பிடிட்டிகள் உள்ளவர்கள்,
இரண்டாவது கோவிட் தடுப்பூசி டோஸை முடித்து 9 மாதங்களை கடந்தவர்கள்,
ஜனவரி 10 முதல் ‘முன்னெச்சரிக்கை அளவை’ பெறத் தகுதியுடையவர்கள்
பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்யாமலும் நேரடியாக தடுப்பூசி மையத்திகே சென்றும் 3வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
ஏற்கனவே பயன்படுத்திய அடையாள அட்டை அல்லது கொரோனா தடுப்பூசி சான்றிதழை கொண்டு செல்வது அவசியமாகும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய்களுக்கான சான்றிதழ் ஏதும் சமர்ப்பிக்க தேவை இல்லை. தாங்கள் சுயமாக மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள மட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். முதல் இரண்டு டோஸ் எந்த தடுப்பூசி போடப்பட்டதோ தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் அதே நிறுவன டோஸ்தான் போடப்படும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் டோஸ் போடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள், “ கோவின் தளத்தில் தடுப்பூசிக்கு பதிவிடலாம். எந்தவிதான புதிய பதிவும் தேவையில்லை. ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒருமுறை தங்கள் பதிவை முன்னெச்சரிக்கை டோஸ் பிரிவில் பதிவு செய்தால் போதுமானது. 60வயதுக்கு ேமற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியிருந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது, மருத்துவரிடம் எந்த சான்றிதழும் பெற்று கொண்டு செல்லத் தேவையில்லை” என மத்தியஅரசு ஏற்கனவே தெரிவித்து உள்ளது.