பெங்களூரு:

ம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், தனியார் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்,  இன்னும் 2 நாட்களில் சபாநாயகரின் பலம் என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்வார்கள் என்று ஆவேசமாக கூறினார்.

மேலும்,  அனைத்துக்கட்சிகளுமே பணத்தை பிரதானமாக வைத்து அரசியல் செய்கின்றன, இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்கள் அல்ல  என்றும் கடுமையாக சாடினார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. அரசியலில் நடைபெற்ற குதிரை பேரத்தின் காரணமாக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

பாரதியஜனதா கட்சியின் அதிகார போதையின் காரணமாக, ஒன்றரை ஆண்டுகாலமாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீசிய வலையில் 15 எம்எல்ஏக்கள் சிக்கிய நிலையில், குமாரசாமி ஆட்சி மீது நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் பகிரங்கமான அரசியல் நாடகம், நாடு முழுவதும் கடும் அதிர்வலை களை ஏற்படுத்தி வந்த நிலையில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் திறம்பட எதிர்கொண்டு, தனது அதிகாரத்தை யாரும் கேள்விக்கேட்க முடியாது என்று உச்சநீதி மன்றத்திற்கும், மாநில கவர்னருக்கும், ஏன் மாநில முதல்வருக்கும் கூட சவால் விட்டு சபையை நடத்தி வந்தார் சபாநாயகர் ரமேஷ்குமார்.

அவர்மீது சிலர் புளுதிவாரி தூற்றியபோதுகூட, மற்றவர்களைப்போல அரசியலில் கோடிகளை சம்பாதித்தது இல்லை என்றும், அரசியல் சாசனப்படி தான் அனைத்தும் நடக்கும், நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்று பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், அவர் அறிவித்தபடி நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்தார்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சபாநாயகர்,  இன்னும் 2 நாட்களில் சபாநாயகரின் பலத்தை அனைவரும் அறிந்துகொள்வார்கள் எனக் கூறியதுடன், அனைத்துக் கட்சிகளுமே பணத்தை பிரதானமாக வைத்து அரசியல் செய்கின்றன. இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல கடுமையாகவும், ஆவேசமாகவும் விமர்சித்தார்.

சபாநாயகர் கூறியுள்ள 2 நாள்கள் என்பது, அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான தனது தீர்ப்பா அல்லது, அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கப்போகும் தீர்ப்பா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.