ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் அல் ஹப்தூர் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாப் அல் ஹப்தூர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள ஒரு திறந்த கடிதத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஈரான் போரில் வளைகுடா நாடுகளை இழுத்தது யார்? மத்திய கிழக்கு பிராந்தியத்தை போர்க்களமாக்க யார் அனுமதி கொடுத்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கடிதத்தை அவர் தனது X பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தியதன் பின்னர், ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வளைகுடா நாடுகள் மீது மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், “எங்கள் பகுதியை போர்க்களமாக மாற்ற யார் உங்களுக்கு அனுமதி அளித்தார்கள்?” என்று ஹப்தூர் கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் நிலைத்தன்மை ஆகியவை வளைகுடா மற்றும் அரபு நாடுகளின் பெரும் சக்திகள் இதை தங்களின் சண்டையைத் தீர்க்கும் மேடையாக இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்தப் போர் அமெரிக்க மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். Institute for Policy Studies வெளியிட்ட கணக்குகளின்படி, இந்தப் போருக்கான நேரடி இராணுவச் செலவு 40 முதல் 65 பில்லியன் டாலர் வரை இருக்கலாம். போர் நீண்டால் பொருளாதார பாதிப்புகளுடன் மொத்த செலவு 210 பில்லியன் டாலர் வரை உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவிர, தேர்தலில் போர்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறிய வாக்குறுதியை டிரம்ப் மீறிவிட்டதாகவும் ஹப்தூர் விமர்சித்தார். சோமாலியா, ஈராக், ஏமன், நைஜீரியா, சிரியா, ஈரான் மற்றும் வெனிசுவேலா உள்ளிட்ட பல நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவுகளால் அமெரிக்கர்களிடையே டிரம்பின் ஆதரவு குறைந்து வருவதாகவும் அவர் எச்சரித்தார். “இந்த மோதல்களால் வளைகுடா நாடுகளும் அதன் மக்களும் சந்திக்கும் இழப்புக்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய கிழக்கு பகுதி மேலும் பதற்றம் அடையாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை தேவை என்றும் ஹப்தூர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

[youtube-feed feed=1]