சென்னை: மத்திய பட்ஜெட் குறித்து ‘ஆட்டோவில்’ எழுதி தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ள சென்னை சாமானியன், மத்தியஅரசுக்கு யார் மீது அக்கறை என்று என கேள்வி எழுப்பி உள்ளதுடன் மக்களே சிந்திப்பீர் என்று தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற 2022-23 நிதியாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நாட்டின் வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 1ந்தேதி) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட இந்த காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டின்போது, “உலகளவில் இந்திய பொருளாதாரம் தான் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத் திற்காக மோடி அரசு செயலாற்றி வருகிறது. ஆகவே அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால், சாமானிய மக்களுக்கு எந்தவொரு அறிவிப்போ, சலுகையோ அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஏர் இந்தியா போல, எல்ஐசி பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்யப்படும் என்பதை மட்டும் கூறியிருந்தார். இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பட்ஜெட் குறித்த தனது ஆதங்கத்தை ஆட்டோவின் பின்பகுதியில் எழுதி, மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.
அதில், பட்ஜெட் சிறுகுறு தொழில் முனைவோருக்கு ஏமாற்றம். கார்பரேட் நிறுவனங்களுக்கு 12% வரியில் இருந்து 7% சலுகை. சொந்த மக்களிடம் அதிக வரிசூலித்ததாக பெருமைப்படுவது. வரிவருவாய் அதிகம் உள்ளது. ஆனால், பொதுத்துறை மிகமிக குறைந்த விலையில் விற்க துடிப்பது ஏன்? யார் நலனின் அக்கறை? மக்களே சிந்திப்போம். என தெரிவித்துள்ளார்.