உறவுகள் – கவிதை பகுதி 6

நீ யார் ?

பா. தேவிமயில் குமார்


 

மலர்க்கொத்துடன்
மனித உருவெடுத்து
நிற்கின்றன,
ரத்தம் உறிஞ்சும்
ராட்சச அட்டைப்பூச்சிகள் !
நான் உன் நண்பன் என….
நம்பிய போது……
நடந்த கொடூரங்கள் பல !

 

உடன்பிறவா
உன்
அண்ணன் நான் !
அருகே வா !
என்றவன் …….
அணைத்த போதுதான்
இந்த பெண் பிறவி
ஏனென்று நினைக்கிறாள் !
எத்தனை போலி
உறவென விசும்புகிறாள் !

 

உன் தகப்பன் மாதிரி
உரிமையோடு வா !
என்றவன்…..
_ _ _ _ _ _ அழைத்தபோதுதான்
பொய்யின்,
பருமன் பெரிதென
புரிந்து கொண்டாள் !
போலிகள் அசலை விட
பளபளப்பானவை என
பார்த்து மனம் நொந்தாள் !

 

வயோதிகம் ஆன
வன்ம மிருகங்கள் சில
குழந்தைகளிடம்
காட்டும் வெறித்தனம் !
அப்பப்பா…….
அப்போதுதான்
ஆணினத்தை வெறுக்கிறாள் !

 

இந்த நூற்றாண்டில்
இப்போது தான்
இவ்வளவு
சுதந்திரம் என்ற
சுத்தப் பொய்யின்
முகமூடிகளை
மாற்ற விரும்புகிறோம் !

 

இல்லையென்றால்
இவளுக்கு,
பாதுகாப்பில்லை என்ற
பெயரில், மீண்டும்
அடுக்களையும்,
அந்தப்புரத்தையும்,
எங்கள் முகவரிகளாய்
மாற்றி விடுவீர்கள் !

 

எங்கள்
ஆடை,
அணிகலன்,
சுதந்திரம்,
சம உரிமை,
கெளரவம்,
கர்வம்,
படிப்பு,
பதவி,
திருமணம்,
தனிப்பட்ட வாழ்க்கை,
விருப்பு,
வெறுப்பு,
பற்றிப் பேசிடும்
ஆணினமே !
நீ யார் ???
எங்களைப் பற்றி
எழுதிடவும்,
விவாதிக்கவும் !

 

சட்டத்தையும்
மதிப்பதில்லை !
சகோதரிகள் நாங்கள்
என்றால்……
அதையும் மதிப்பதில்லை !

 

நாங்கள்
உங்களுக்கான
போகப் பொருளோ !
போட்டிப் பொருளோ !
அல்ல !

 

உன்னைப் போல
இந்த சமுதாயத்தில்
சம உரிமையுடன்
சந்தோஷமாக
வாழப் பிறப்பெடுத்தவர்கள் !

 

தண்டனையால்
வருவது மாற்றமல்ல !
தானாக வருவதே
மாற்றம் !

 

எங்களுக்கான
மாற்றத்தினை
இனி நாங்களே
மாற்றிக்கொள்கிறோம் !

 

அதுவரை….

 

கனவுகளுடனும்
கறை படிந்த
நிஜங்களுடனும்,
நாளைய பொழுது
நான்றாக இருக்குமென்று
நம்பிக்கையுடனும்……

 

– வன்கொடுமையால்
பாதிக்கப்பட்ட பெண்கள்