இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா துவங்கவுள்ள நிலையில், இதுவரை நடந்துள்ள உலகக்கோப்பை போட்டிகளில், முதல் 5 அதிகபட்ச தனிநபர் ரன்களை அடித்திருப்பவர் யார் என்ற ஒரு மேலோட்டமான பார்வையை ஓடவிடலாமா..!

மார்ட்டின் குப்தில் – 237 ரன்கள் (2015)

கடைசியாக நடந்த உலகக்கோப்பையில், காலிறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, போட்டியை நடத்திய நாடுகளுள் ஒன்றான நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் அடித்த 237 ரன்கள்தான், உலகக்கோப்பை போட்டிகளில், ஒரு தனிப்பட்ட வீரர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.

இதற்காக இவர் 163 பந்துகளை சந்தித்து, 24 ஃபோர்கள் மற்றும் 11 சிக்ஸர்களை விளாசி, இந்த எண்ணிக்கையைத் தொட்டார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி எடுத்த மொத்த ரன்கள் 393. இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேறு எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்கவில்லை என்பதுதான்.

குப்தில் அடித்த 237 ரன்கள்தான், இதுவரை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இரண்டாவது அதிகபட்ச ரன் சாதனையாக இருக்கிறது. முதலிடத்தை இந்தியாவின் ரோகித் சர்மா தக்கவைத்துள்ளார்.

ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த இந்தியரல்லாத 2 வீரர்களில் இவரும் ஒருவர்.

கிறிஸ் கெயில் – 215 ரன்கள் (2015)

கடைசியாக நடந்த உலகக்கோப்பையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்தப் போட்டியில், அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் அடித்த 215 ரன்கள்தான், உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.

இந்த ரன்களை அடித்தபோது, இரட்டை சதமடித்த இந்தியர் அல்லாத முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றதோடு, உலகக்கோப்பையில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

இந்த ரன்களை 10 ஃபோர்கள் மற்றும் 16 சிக்ஸர்கள் துணையுடன் நிகழ்த்தினார். மொத்தம் 147 பந்துகள் தேவைப்பட்டன. முதல் சதமடிக்க 105 பந்துகளை செலவழித்த கெயில், அடுத்த சதத்திற்கு பெரிய கஞ்சனாக மாறி வெறும் 33 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மொத்த ரன்கள் 373.

கேரி கிறிஸ்டன் – 188 ரன்கள் (1996)

பின்னாளில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற தென்ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன், கடந்த 1996 உலகக்கோப்பையில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக அடித்த 188 ரன்கள் என்ற சாதனை, உலகக்கோப்பையின் அதிகபட்ச ரன்களாக அடுத்த 19 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்தது.

மொத்தம் 159 பந்துகளை சந்தித்த இவர், 13 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்களின் மூலம் இந்த இலக்கை எட்டினார். இப்போட்டியில் தென்ஆப்ரிக்க அணி எடுத்த மொத்த ரன்கள் 321.

செளரவ் கங்குலி – 183 ரன்கள் (1999)

அப்போதைய உலகச் சாம்பியன் இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் கங்குலி எடுத்த 183 ரன்கள்தான், உலகக்கோப்பை போட்டிகளில் நான்காவது அதிகபட்ச ரன்கள். இவரும் டிராவிட்டும் சேர்ந்து அப்போட்டியில் மொத்தமாக 318 ரன்கள் எடுத்தனர்.

சதமடிக்க 119 பந்துகளை எடுத்துக்கொண்ட கங்குலி, பின்னர் அடுத்த 83 ரன்களை எடுக்க வெறும் 39 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். மொத்தமாக 17 ஃபோர்களும், 7 சிக்ஸர்களும் விளாசினார். இந்த ரன்களே, ஒருநாள் போட்டித் தொடர்களில் கங்குலி எடுத்த அதிகபட்ச ரன்கள்.

இப்போட்டியில் இந்திய அணி மொத்தமாக எடுத்த ரன்கள் 373. பின்னர் ஆடிய இலங்கை அணி 216 ரன்களுக்கு சுருண்டது.

விவியன் ரிச்சர்ட்ஸ் – 181 ரன்கள் (1987)

ஒருகாலத்தில் அனைத்துப் பந்துவீச்சாளர்களையும் மிரட்டிய புகழ்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் புயல் விவியன் ரிச்சர்ட்ஸ், இலங்கை அணிக்கு எதிராக எடுத்த 181 ரன்கள்தான், உலகக்கோப்பை போட்டியின் 5வது அதிகபட்ச ரன்கள். இந்த ரன்களை அடிக்க ரிச்சர்ட்ஸ் செலவழித்த பந்துகள் 125.

மொத்தம் 16 ஃபோர்களையும், 7 சிக்ஸர்களையும் அடித்தார். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அடித்த மொத்த ரன்கள் 360. தான் அடித்த 181 ரன்களின் மூலம், இந்தியாவின் கபில்தேவ் 1983ம் ஆண்டு அடித்த 175 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

பின்னர் ஆடிய இலங்கை அணி, வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுக்க, 191 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றிபெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

– மதுரை மாயாண்டி