“தூத்துக்குடி வன்முறைக்கு சமூகவிரோதிகளே காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
“தூத்துக்குடி வன்முறைக்கு சமூகவிரோதிகளே காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது கண்டனத்துக்குறியது. முதல்வர் எடப்பாடி கூறியது போலவே ரஜினிகாந்தும் தெரிவித்துள்ளார்.
யார் சமூக விரோதிகள்? லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அமைதியாக போராடினார்கள். அந்த போராட்டத்தில் நச்சு ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு வந்தார்கள்.
ரஜினி கூறியது போல அவர்கள் சமூக விரோதிகள் என்றால் ஆயுதத்தோடு வந்தார்களா, தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வந்தார்களா? இதை ரஜினி விளக்க வேண்டும்.
மக்கள் போராட்டம் பற்றி ரஜினிக்கு இதுவரை தெரியாமல் இருந்திருக்கலாம். அரசியலுக்கு வருவதால் இப்போதுதான் போராட்டம் குறித்து தெரிந்திருக்கலாம்.
மக்கள் எவரும் வேண்டுமென்று போராடுவதில்லை. அடக்கு முறையை எதிர்த்தே போராடுகிறாரகள் என்பதை நடிகர் ரஜினிகாந்த் உணர வேண்டும்.
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் ராஜினாமாவா என்கிறார் ரஜினி. விரக்தியின் உச்சத்தில் மக்களிடமிருந்து எழும் கோரிக்கை இது. இதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்.
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது தவறு என்றும் அப்படி செய்யும் சமூகவிரோதிகளின் படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
காவல்துறையினரே தீ வைத்தார்கள் என்பது ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதே பார்த்தோம். அது போல இங்கேயும் ஏன் நடந்திருக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ரஜினி இதை உணரவில்லை.
மொத்தத்தில் ரஜினிகாந்த் ஆட்சியாளர்களின் – காவல்துறையின் – ஆளும் வர்க்கத்தின் குரலாக ஒலிக்கிறார். மக்கள் யாரும் பொதுச்சொத்துக்களை அழிக்க விரும்பவதில்லை. அவர்கள் அமைதியாக குரல் எழுப்பி, மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு செல்லும்போது துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது.
காவல்துறை மீது தாக்குதல் கூடாது என்று இப்போதும் கூறுகிறார். இதை மனிதநேயம் என்று வைத்துக்கொள்ளலாம்.
காவல்துறை அரசாங்கத்தின் அங்கம்.. ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.. கைது செய்து சித்திரவதை செய்வார்கள் என்பது தெரிந்தும் தாக்குகிறார்கள் என்றால் காவல்துறையின் அடக்குமுறை எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் ரஜினிகாந்த் உணரவேண்டும்.