டில்லி
உலகில் மிகவும் அதிகமாக மாசு படிந்த நகரம் என டில்லியை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் சர்வதேச அளவில் அதிகம் மாசு படிந்த நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்றை நிகழ்த்தியது. இந்த ஆய்வில் கடந்த 2010 முதல் 2016 வரை மக்கள் தொகை 1.4 கோடிக்கு மேல் உள்ள நகரங்கள், காற்றில் கலந்துள்ள மாசின் அளவு பி எம் 10 க்கு மேல் உள்ள நகரங்கள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
ஆய்வின் முடிவில் இந்தியாவின் தலைநகர் டில்லி உலகில் மிகவும் அதிகமாக மாசு படிந்த நகரில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கெய்ரோ நகரும் மூன்றாவது இடத்தில் மும்பை நகரமும் உள்ளது. இந்தியாவின் இரு பெரும் நகரங்கள் அதிக மாசு உள்ள நகரங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளதற்கு உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.
இந்திய நகரங்கள் வெளிப்புறத்தில் வாகனங்கள் வெளியிடும் புகையாலும் உட்புறத்தில் சமையலுக்காக உபயோகபடுத்தும் கரி, விறகு, மண்ணெண்ணெய் போன்றவைகளாலும் பெரிதளவும் மாசு படிவதாக இந்த மையம் தெரிவித்துள்ளன. அத்துடன் மத்திய அரசு நாடெங்கும் 3.7 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளித்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.