டில்லி
டில்லி மிருகக்காட்சி சாலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளைப் பெண் புலியுடன் வங்க ஆண் புலி இணைய உள்ளது.
டில்லி மிருகக்காட்சி சாலையில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெள்ளைப் புலி ஒன்றும் வங்கப் புலி என அழைக்கப்படும் பிரவுன் நிற புலி ஒன்றும் இணைந்து இரு குட்டிகள் ஈன்றன. அதற்குப் பிறகு அது போன்ற முயற்சிகள் எதுவும் நடத்தப் படவில்லை. தற்போது டில்லி மிருகக் காட்சி சாலையில் 12 புலிகள் உள்ளன. இவற்றில் 7 வெள்ளைப் புலிகள் ஆகும்.
தற்போது வெள்ளைப் புலியான நிர்பயா மற்றும் வங்கப் புலியான கரன் ஆகிய இரு புலிகளையும் ஒன்று சேர வைக்க திட்டம் தீட்டிய மிருகக் காட்சி சாலை அதிகாரிகள் இரு புலிகளையும் அருகருகே உள்ள கூண்டுகளில் அடைத்தனர். அந்தப் புலிகள் ஒன்றுகொன்று விரும்பினால் மட்டுமே இணைப்பு சாத்தியமாகும் என்பதால் இவ்வாறு அமைக்கப்பட்டது.
இரு புலிகளும் ஒன்றை ஒன்று விரும்புவதை தெரிந்துக் கொண்ட பின் இரு புலிகளும் கடந்த ஞாயிறு அன்று ஒரே கூண்டில் அடைக்கப்பட்டன. பழகிய புலிகள் திங்கட்கிழமை முதல் இணைய தொடங்கி உள்ளன. இவ்வாறு இணைவதால் மூன்று தினங்களில் பெண் புலி கர்ப்பமுறும் என கூறப்படுகிறது.
அநேகமாக இந்தப் புலிகளின் குட்டிகள் வரும் செப்டம்பர் 2018ல் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.