சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அரிய வகை பெண் வெள்ளைபுலி உயிரிழந்தது. உடல்நலப் பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த வெள்ளை புலி ஆகான்ஷாவின் வயது 13.
சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவான இதில் 170க்கும் மேற்பட்ட விலங்கினங்கள்,பறவைகள் ஊர்வன போன்றவை வசித்து வருகின்றன. இயற்கை சூழலுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் வனவிலங்குகளை பொதுமக்கள் நேரடியாக காண முடியும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தீவிரமாக பரவிய காலக்கட்டத்தில் வண்டலூர் பூங்காவில் விலங்குகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. அதையடுத்து அங்கும் தீவிரமான கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும்,சிங்கம், புலி போன்றவை உயரிழந்தது.
இந்த நிலையில், தற்போது 13 வயதான பெண் வெள்ளைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளது. ஆகான்ஷா எனப்படும் இந்த வெள்ளைப்புலியான, கடந்த இரு வாரங்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் குழு அந்த புலிக்கு சோதனை செய்தனர். அதில், ஆகான்சாவுக்கு அடாக்சியா என்ற நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த வெள்ளை புலிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், வெள்ளை புலியின் உடல்நிலை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை உருவானது. அதே வேளையில் சரியான முறையில் உணவும் உட்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆகான்ஷா நேற்று இரவு 9 மணி அளவில் கூண்டில் இறந்து கிடந்ததாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கால்நடைத்துறை மருத்துவர்களின் தலைமையில் வெள்ளை புலியின் பிரேதபரிசோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.