சென்னை: இந்திய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவ வீரர்கள் மருத்துவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தன்னலமற்று மக்கள் நலன் காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
பிறப்பு எளிதாக அமைவதற்கும், இறப்பில் இருந்து உயிர்களை காப்பதற்கும் மருத்துவ சேவை அவசியமாகிறது என்பதன் அடையாளமாக இந்த நாள் விளங்குவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ சேவை இன்றியமையாததாய் இருக்கிறது என்றும், அதனை உணர்ந்து வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவ வீரர்கள் போல அல்லும் பகலும் மருத்துவர்கள் அரும் பணியாற்றியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்த நேரத்தில், போர்க்கால நடவடிக்கைகளில் தளகர்த்தர்களாக – சிப்பாய்களாக – முன்கள வீரர்களாக மருத்துவர்கள் பணியாற்றியதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், இது மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான அரசாக என்றும் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.