ஜெய்பூர்:
‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்தி திரைப்பட சூட்டிங்கின் போது ராஜஸ்தான் மாநிலம் கன்கனி கிராமத்தில் மான் வேட்டை ஆடியதாக நடிகர் சல்மான்கான், சக நடிகர்களான சயிப் அலி கான், நீலம், தபு, சோனாளி பெந்திரே ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1998ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னதாக இந்த வழக்கில் இருந்து இதர நடிகர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்து நீதிபதி அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே 4 பேரும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேறி உடனடியாக மும்பைக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால், சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா தீர்ப்பு விபரம் தெரி ந்தவுடன் உடனடியாக ஜோத்பூர் புறப்பட்டு சென்றார். சிறையில் சுமார் ஒரு மணி நேரம் வரை அவர் சல்மான்கானை சந்தித்து ஆறுதல் அளித்து பேசிக் கொண்டிருந்தார்.
2 படங்களில் மட்டுமே சல்மான்கானுடன் இணைந்து ஜிந்தா நடித்துள்ளார். சிறையில் சல்மானுக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளது. அறை எண் 2 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி ஆசாராம் அடைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.