பகுசராய்
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத இயக்கத்தால் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரருக்கு மாணவர் தலைவர் கன்னையாகுமார் இறுதி மரியாதை செலுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அந்த நால்வரின் சிஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டரான பிண்டு குமாரும் ஒருவர் ஆவார். பீகாரை சேர்ந்த அவரது உடல் நேற்று விமானம் மூலம் பாட்னாவுக்கு அனுப்பப்பட்டது.
சிஆர்பிஎஃப் வீரர் பிண்டு குமாரின் உடலை பெற்றுக் கொள்ளவோ அல்லது அவரது ஊரான பகுசராயில் நடைபெற்ற இறுதிச் சடங்குக்கோ பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் யாருமே வரவில்லை. தற்போது ஆட்சி செய்து வரும் பாஜகவின் கூட்டணி கட்சி முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் உள்ள மாநில அமைச்சர்கள், பிரதமர் மோடி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக இருந்துள்ளனர்.
பீகார் மக்கள் இது குறித்து, “தேசப் பற்று குறித்து அடிக்கடி பாஜக பேசி வருகிறது. ஆனால் தேசத்துக்காக உயிர் நீத்த சிஆர்பிஎஃப் வீரருக்கு இறுதி மரியாதை செலுத்த பாஜக கட்சியினர் யாரும் வரவில்லை” என கூறி வந்தனர். இந்நிலையில் மரணம அடைந்த சிஆர்பிஎஃப் வீரர் உடலுக்கு ஜவகர்லால் நேரு மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் இறுதி மரியாதை செலுத்தி உள்ளார்.
ஜவகர்லால் நேரு மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.