டெல்லி: ராகுல் காந்திக்கு பதிலாக பாஜக எம்பி தேஜஸ்வி யாதவ், ஜப்பானிய தற்காப்பு கலையான அகிடோவில் கருப்பு பெல்ட் வாங்கினார் என்று தவறுதலாக பதிலளித்த போட்டியாளர் கோன் பனேகா குரோர்பதியில் ஆறரை லட்சம் ரூபாயை இழந்தார்.
வட இந்திய தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி (உங்களில் யார் கோடீசுவரர்). வெற்றிகரமான இந்த நிகழ்ச்சி தற்போது 11வது சீசனை எட்டி இருக்கிறது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, சுவராசியமாகவும் கொண்டு செல்பவர் பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். அவரின் லாவகமான வர்ணனைக்காகவே லட்சக்கணக்கானோர் அந்த நிகழ்ச்சியை காண்பது உண்டு.
நேற்று ஒளிபரப்பான பகுதியில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்திருக்கிறது. பேஸ்புக், டுவிட்டர் என ஏகத்துக்கும் வைரலாகி இருக்கிறது. அந்த போட்டியில் உத்தரப்பிரதேசம், மதுரா பகுதியைச் நரேந்திர குமார் என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அவரிடம் ஒரு கேள்வியை கேட்கிறார் அமிதாப். அதற்கு பதில் சொன்னால் கிடைக்கும் தொகை 6,40,000 ஆயிரம் ரூபாய். கேள்வி இதுதான்: ஜப்பானிய கலையான அகிடோ-வை தெரிந்த பிரபலமான எம்பி யார் என்றும், அதற்கான விடையை கூறுமாறு கேட்கிறார் அமிதாப்.
அதற்காக போட்டியாளர் நரேந்திர குமாருக்கு 4 விடைகள் தரப்பட்டிருந்தன. கவுதம் கம்பீர், ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியவையே அந்த விடைகள்.
நீண்ட யோசனைக்கு பிறகு நரேந்திர குமார் டிக் செய்த விடை தேஜஸ்வி சூர்யா. அவர் பெங்களூரு தெற்கு தொகுதியின் எம்பி. துரதிருஷ்டவசமாக அந்த விடை தவறாகி போக, போட்டியில் தோற்றார் நரேந்திர குமார். சரியான விடை ராகுல் காந்தி என்பதாகும்.
அவையில் இருந்த பலரும் இதற்கான விடையை தவறாகவே கணித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமது பெயர் இடம்பெற்றது பற்றி அறிந்த தேஜஸ்வி சூர்யா, இதை டுவிட்டர் செய்திருக்கிறார்.
தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நானும் அகிடோவில் கருப்பு பெல்ட் வாங்க விரும்பினேன். ஒரு வேளை வாங்கி இருந்தால், இன்று நீங்கள் பணக்காரராக இருந்திருப்பீர்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த பதிவை வெளியிட்ட உடனேயே இணையத்தில் ஏகத்துக்கும் வைரலாகி இருக்கிறது. டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய பேர் இதை பகிர ஆரம்பித்தனர். ஏராளமான கருத்துகளும் வந்து குவிந்திருக்கின்றன.
நிறைய பேர் தேஜஸ்வி தான் சரியான விடை, ராகுல் அல்ல என்று நினைத்ததாக பதிவிட்டு இருக்கின்றனர். ஆக மொத்தத்தில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட நுட்பமான (பெரிதாக யாரும் அறிந்திருக்காத) கேள்வியும் பிரபலமானது, அதற்கான விடையும் பேசப்பட்டது என்றே கூறலாம்.