மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியை தன்னால் மறக்கவே முடியவில்லை என்று தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார் இந்திய வீரர் லோகேஷ் ராகுல்.

நடந்து முடிந்த ஏதேனும் ஒரு போட்டியின் முடிவை மாற்ற முடிந்தால், நீங்கள் எந்தப் போட்டியை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

50 ஓவர் உலகக்கோப்ப‍ை தொடர் நிறைவடைந்து, ஓராண்டு முடியப்போகிறது என்ற போதிலும், பல இந்திய வீரர்களால் அரையிறுதி வெளியேற்றத்தை இன்னும் மறக்க முடியவில்லைதான். தற்போதும், ராகுலும் அதை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்ப‍ை அரையிறுதிப் போட்டியில் கிடைத்த தோல்வியை மாற்ற விரும்புகிறேன். லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்த நாங்கள், அரையிறுதியில் தோற்று வெளியேறியதை ஏற்கவே முடியவில்லை.

அது மிகுந்த வேதனை அளித்தது. இன்னும் துயர சம்பவமாகவே மனதில் நீடிக்கிறது. சமயங்களில், இத்தோல்வி குறித்து கனவு வந்து, எனது தூக்கம் கலைந்து சம்பவங்களும் உண்டு” என்று கூறியுள்ளார் ராகுல்.