சண்டிகர்: கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை மீண்டும் தொடங்குவதைவிட, பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதுதான் முதல் முக்கியம் என்று பேசியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமான கபில்தேவ்.
மேலும், கொரோனா நிதியைத் திரட்டுவதற்காக இந்தியா – பாகிஸ்தான் இடையில், இருதரப்பு ஒருநாள் தொடர் நடத்தப்பட வேண்டுமென்ற யோசனையையும் அவர் நிராகரித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “கிரிக்கெட்டைப் பற்றி பேசுவதுதான் இப்போதைக்கு முதல் முக்கியமா? என்னுடைய கவலையெல்லாம், எப்போது பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படும் என்பதுதான். நமது இளைய தலைமுறையினருக்கு அதுதான் முதல் தேவை.
கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் பிறகு தொங்கட்டும். இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட்டை தொடங்குவதற்கு பாகிஸ்தான் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், அந்நாடு, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை முதலில் நிறுத்தட்டும். அதற்கு செலவிடும் பணத்தை வேறு நல்ல காரியங்களுக்கு செலவிடட்டும்.
அந்தப் பணத்தில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைக் கட்டலாம். மத நிறுவனங்கள் அரசின் மக்கள் நலப் பணிகளுக்கு நிதியளித்து உதவலாம்” என்று பேசினார் கபில்தேவ். கடந்த 1983ம் ஆண்டு இந்திய அணிக்கு முதன்முதலாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்த முன்னாள் ஜாம்பவானுக்கு தற்போது 61 வயதாகிறது.