டில்லி

வெளிநாடு பயணம் செய்யும் இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் மற்றும் அதற்கான விதிமுறைகளை இங்கு காண்போம்

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது.    இதையொட்டி பல நாடுகளில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.   மிகவும் அவசிய பயணம் மேற்கொள்வோர் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டது.   தற்போது பாதிப்பு குறைந்த போதிலும் பல நாடுகளில் தனிமை உத்தரவு அமலில் உள்ளது.

கனடா

கனடா நாட்டில் இந்தியர்கள் வரத் தடை விதிக்கப்பட்ட போதிலும் நேரடியாக இந்தியாவுக்கு வராமல் வேறு நாடுகளில் இருந்து வரும் இந்தியர்களுக்கு அனுமதி உள்ளது.   இதனால் செர்பியா உள்ளிட்ட நாடுகள் மூலம் கனடா செல்லும் இந்தியர்களுக்கு அந்நாடுகள் ஒரு வாரத் தனிமையைக் கட்டாயம் ஆக்கி உள்ளது.  எனவே இந்தியர்களுக்கு தற்போது எந்த வழியில் வெளிநாடுகள் செல்வது என்பது குழப்பமாக உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து வருவோர் இந்தியாவில் 14 நாட்களுக்கு மேல் தங்கி இருந்தவர்கள் என்றால் தடை விதித்துள்ளது.  இதற்கான விசா கிடைத்தால் அதைச் சென்னை அல்லது டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அனுமதிக்கு அனுப்பி அது கிடைத்தால் மட்டுமே இந்தியர்கள் நேரடியாக அமெரிக்கா செல்ல முடியும்.

இதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் அங்கு வந்ததும் சோதனை செய்து கொண்டு ஒரு வாரம் தனிமையில் இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.    இவ்வாறு பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் இந்தியா இன்னும் அபாயமான நாடுகள் பட்டியலில் உள்ளது.  எனவே இங்கு வரும் இந்தியர்கள் நேரடியாக இந்தியாவில் இருந்து வராமல் வேறு ஏதாவது நாட்டில் 10  நாட்கள் தங்கி விட்டு வரவேண்டும்.   அதே வேளையில் இங்கிலாந்தில் வசிக்கும் உரிமை பெற்றவர்கள் இங்கு வந்ததும் சோதனை செய்து கொண்டு 10 நாட்கள் விடுதியில் தங்கி இருந்து மேலும் இரு சோதனையில் நெகடிவ் ஆன பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அனைத்து நாட்டினரும் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்தியர்கள் சிறப்பு அனுமதியின் பேரில் மட்டுமே பயணம் செல்ல முடியும்.    இந்த சிறப்பு அனுமதி பெறும் இந்தியர்கள் கொரோனா தடுப்பு பணியாளர்கள்,  தேசிய அழைப்பாளர்கள், உறவினரின் மரணத்தை முன்னிட்டு செல்வோர்,  உடல்நலம் சரியில்லாத குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்வோர்கள் ஆகியவர்களாக இருக்க வேண்டும்.

ரஷ்யா

ரஷ்யாவுக்கு வருவோர் அனைவரும் வருவதற்கு 72 மணி நேரத்துக்குட்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை அவசியம் வைத்திருக்க வேண்டும்.  இங்கு இந்தியா உள்ளிட்ட மிகவும் குறைந்த நாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   அமெரிக்கா மற்றும் கனடா மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் அவர்களும் 72 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.   இருப்பினும் ஜெர்மனி போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களை அத்தியாவசிய பணிகளுக்காக வரும் இந்தியர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.   பொதுவாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோவிஷீல்ட் ஊசி அங்கீகாரம் பெற்றுள்ளது.