இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா கொள்ளை நோய் தலைவிரித்தாடுவதை கண்டு இந்திய மக்களை காப்பாற்றும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது.

ஏப்ரல் 30 முதல் மே 2 வரை, அமெரிக்காவில் இருந்து 1000 ஆக்சிஜன் சிலிண்டர்களும், அயர்லாந்தில் இருந்து 700, இங்கிலாந்தில் இருந்து 500, உஸ்பெகிஸ்தானில் இருந்து 150 ஆக்சிஜன் சிலிண்டர்களும் வந்து சேர்ந்துள்ளன.

3,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1,36,000 ரெம்டெசிவிர் மருந்துகள் மொத்தம் சுமார் 300 டன் எடையுள்ள மருந்து பொருட்கள் 25 விமானங்களில் கடந்த ஐந்து நாட்களில் இந்தியா வந்து சேர்ந்திருக்கிறது என்று டெல்லி விமான நிலைய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

ஒரு வாரம் ஆன நிலையிலும் இந்த மருந்து பொருட்கள் எதுவும் இதுவரை எந்த மாநிலத்திற்கும் விநியோகிக்கப்படாமல் உள்ளது குறித்து ‘ஸ்க்ரோல்’ செய்தி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள எட்டு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் ஆறு மருத்துவமனைகள் தலைநகர் டெல்லியில் உள்ளன.

மருந்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கடந்த ஒரு வாரமாக இந்தியாவை வந்தடைந்த போதும், இதுவரை அவை எந்த ஒரு மாநிலத்திற்கும் சென்று சேரவில்லை, அதே நேரத்தில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்றி உயிரிழக்கும் சம்பவம் தினமும் நடந்துவருகிறது.

தமிழகம், பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநில சுகாதார துறை மத்திய அரசிடம் இருந்து இதுகுறித்து தங்களுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.கே. ஜெயினை தொடர்பு கொண்ட ‘ஸ்க்ரோல்’ செய்தியாளர்களுக்கு, “செஞ்சிலுவை சங்கம் வெளிநாட்டில் இருந்து வரும் உதவி பொருட்களுக்கு இந்தியாவில் முகவர்களாகவே செயல்படுகிறோம், இந்திய அரசு தரும் உத்தரவுக்கு ஏற்ப அவற்றை அவர்கள் சொல்லும் இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் முக்கிய பணியாக உள்ளது, இந்த பொருட்கள் அனைத்தும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெடிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய சுகாதார துறையில் உள்ள உயரதிகாரிகளை தொடர்பு கொண்ட போது எந்த ஒரு பதிலளிக்கவும் மறுத்துவிட்டார்.

இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்ட உள்ளங்கள் வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைத்த உதவி பொருட்கள் எதுவும் நேற்று மாலை வரை உரிய இடங்களுக்கு சென்று சேரவில்லை என்பதும் அவை எங்கு இருக்கின்றன என்பதும் தெரியாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ நிறுவனங்களும், தனிநபர்களும், தங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக கொரியர் நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம், அதற்கான வரியும் நீக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும், வெளிநாட்டு விமான போக்குவரத்து, இரவு நேர மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளாலும் கொரியர் நிறுவனங்கள் பணிசுமையில் மூழ்கி இருக்கும் வேலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் உதவி பொருட்கள் முன்னுரிமை அடிப்படியில் உரிய நேரத்தில் உரியவர்கள் கையில் சென்று சேருமா என்பது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையே சான்றாக உள்ளது.